சீர்காழி அருகே வாணகிரி கடற்கரை பகுதியில் ஆலிவர்ரெட்லி ஆமை முட்டைகளை சேகரிக்கும் பணி தீவிரம்

சீர்காழி, டிச.22: சீர்காழி அருகே வாணகிரி கடற்கரை பகுதியில் ஆலிவ்ரெட்லி ஆமை மு்ட்டைகளை வனத்துறையினர் சேகரித்து குஞ்சு பொறிப்பகத்தில் வைத்து பாதுகாத்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் பழையாறு முதல் பூம்புகார் வரை உள்ள கடற்கரை பரப்பில் அரிய வகையான ஆலிவ் ரெட்லி ஆமைகள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதியிலிருந்து மார்ச் மாதம் வரை கரைக்கு வந்து முட்டைகள் இட்டு மூடிசெல்லும். ஒரு ஆமை சுமார் 100க்கும் மேற்பட்ட முட்டைகளை இடும். இந்த முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து சீர்காழி பகுதியில் உள்ள கூழையார், கொட்டாயமேடு, வாணகிரி ஆகிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குஞ்சுபொறிப்பகத்தில் சேகரித்து பாதுகாத்து வருவது வழக்கம். இவ்வாண்டு முதலாவதாக சீர்காழியை அடுத்த வாணகிரி கடற்கரையில் ஆலிவ்ரெட்லி ஆமை முட்டைகள் சேகரம் செய்யும் பணி தொடங்கியது. நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் கலாநிதி உத்தரவின்படி, சீர்காழி வன சரகர் குமரேசன் தலைமையில் வன ஊழியர்கள், வனவர்கள் வாணகிரி கடற்கரையில் 156 ஆலிவ்ரெட்லிஆமை முட்டைகளை சேகரித்து அதனை பாதுகாப்பாக அருகில் உள்ள குஞ்சுபொறிப்பகத்தில் சேகரித்து வைத்தனர்.

இதுகுறித்து வனசரகர் குமரேசன் கூறுகையில், ஆலிவ்ரெட்லி ஆமை இனம் அழிந்து வரும் இனமாக தற்போது உள்ளது. அரியவகை ஆமை இனமான இவை மீனவர்களின் நண்பனாக உள்ளது. இந்த வகை ஆமைகள் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரைக்கு வந்து முட்டைகளை இட்டு செல்லும். அவ்வாறு இடப்படும் முட்டைகளை மீனவர்களோ, பொதுமக்களோ சேதப்படுத்தும் செயலில் ஈடுப்படக்கூடாது. அதுபோல கரைக்கு வரும் ஆமைகளுக்கு தொந்தரவு செய்து தடுக்கும் செயலிலும் ஈடுப்படக்கூடாது. குஞ்சு பொரிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள முட்டைகள் பொரித்தவுடன் குஞ்சுகளை பாதுகாப்புடன் கடலில் விடப்படும் என்றார்.

Related Stories: