புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் திருத்தணி வழியாக திருமலைக்கு ஆன்மிக பக்தர்கள் பாதயாத்திரை

திருத்தணி, செப்.18: புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் திருத்தணி வழியாக திருமலைக்கு ஆன்மிக பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இதனால். திருப்பதிக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பெருமாளை வணங்கி வழிபட புரட்டாசி மாதம் சிறப்பானதாகும். இம்மாதம் முழுவதும் பெருமாள் கோயில்களில் விழாக்கள், பிரம்மோற்சவங்கள் நடைபெறும். பெருமாள் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து பெருமாளை தரிசனம் செய்வார்கள். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமைகளில் வீடுகளில் பூஜைகள் செய்து படையலிட்டு, சாமிக்கு துளசி மாலை அணிவித்து நெற்றியில் நாமமிட்டு வழிபடுவார்கள்.

இம்மாதத்தில் திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் குறிப்பாக கருட சேவையில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு சென்று சாமி மாட வீதி உலாவை கண்டு தரிசித்து வழிபடுவார்கள். அதேபோல் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்கள் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு சாமிக்கு 30 நாட்களும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறும். பெருமாள் கோயில்கள் முழுவதும் விழாக்கோலமாக காட்சியளிக்கும்.

புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெருமாள் பாதயாத்திரை குழுவினர் மாலை அணிந்து நேற்று ஆந்திர மாநிலம் திருமலைக்கு பாதயாத்திரையாக செல்லத் தொடங்கியுள்ளனர். தமிழக எல்லையான திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, வேலூர் மாவட்டம் பரதராமி ஆகிய சாலை மார்கமாக நடந்து திருமலைக்கு செல்லத் தொடங்கினர். பெண்கள் குழந்தைகள் பலரும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நடந்து சென்றனர். குறைந்தது 3 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை திருமலைக்கு நடந்து சென்று சாமி தரிசனம் செய்வார்கள். புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் பாதயாத்திரை குழுக்கள் திருப்பதிக்கு செல்லும் சாலைகளில் வரிசை கட்டி நடந்து செல்கின்றனர்.

40 ஆண்டுகளாக பாதயாத்திரை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் பாதயாத்திரை குழுவினர் கூறுகையில் 40 ஆண்டுகளாக தொடர்ச்சியாக புரட்டாசி முதல் நாள் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட 104 பக்தர்கள் பெருமாள் மாலை அணிந்து விரதம் தொடங்கி பாதயாத்திரையாக சென்று சாமி தரிசனம் செய்து வருகிறோம். சோளிங்கர், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு வழியாக கார்வேட்நகர், பச்சிகாபள்ளம், ராமச்சந்திராபுரம் வழியாக திருப்பதிக்கு சென்று ஸ்ரீவாரி மெட்டு மார்கத்தில் திருமை சென்றடைவோம். இரவு நேரங்களில் கிராமங்களில் தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு அதிகாலை யாத்திரை தொடங்கி மதியம் வரை செல்வோம். மாலை மீண்டும் யாத்திரை தொடங்கி இரவு 8 மணி வரை நடந்து செல்வோம். 5 நாட்களில் திருமலை சென்றடைவோம், என்றனர்.

Related Stories: