சாலையில் தவற விட்ட பணத்தை மீட்டு நோயாளியிடம் ஒப்படைத்த போலீசார் காட்டிக்கொடுத்தது கண்காணிப்பு கேமரா மருத்துவ சிகிச்சைக்காக எடுத்து சென்று

வேலூர், டிச.17: வங்க தேசத்தை சேர்ந்த நோயாளி சாலையில் தவற விட்ட பணத்தை மீட்ட போலீசார் மீண்டும் அவரிடமே ஒப்படைத்தனர். கண்காணிப்பு கேமரா மூலம் இந்த பணம் மீட்கப்பட்டுள்ளது. வங்க தேசம் டாக்காவை சேர்ந்தவர் மில்லத் முஸ்தபா ரஹ்மான்(60). இவர் கடந்த சில மாதங்களாக வேலூர் மெயின் பஜாரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்துவதற்காக ₹40 ஆயிரம் பணத்துடன் மருத்துவமனைக்கு எல்ஐசி கானாறு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். சிஎம்சி மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அவர் இடுப்பில் லுங்கியில் கட்டி எடுத்து வந்திருந்த ₹40 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் பணம் எங்காவது சாலையில் விழுந்திருக்கலாம் என நினைத்து, மீண்டும் தான் வந்த வழியே தேடி வந்துள்ளார். பணம் கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வடக்கு போலீஸ் எஸ்ஐக்கள் சோமு, பெருமாள் ஆகியோர், பணம் தொலைந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்த போது, ஆற்காடு சாலை எல்ஐசி கானாறு திருப்பத்தில் பணம் கீழே விழுவதும், அதை பின்னால் வந்த ஒரு ஆட்டோ டிரைவர் எடுத்து செல்வதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த ஆட்டோ பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், பணத்தை எடுத்து சென்றது சத்துவாச்சாரியை சேர்ந்த அன்வர் என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து நேற்று ₹40 ஆயிரம் பணத்தை மீட்ட எஸ்ஐக்கள், பணம் தொலைத்த மில்லத் முஸ்தபா ரஹ்மானிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: