நிலையூர் கால்வாயில் இருந்து மீன் வளர்ப்பிற்காக தண்ணீர் திருட்டு: 2,500 ஏக்கர் விவசாயம் பாதிக்கும் அபாயம்

திருப்பரங்குன்றம், டிச.16:  பாசனத்திற்கு செல்லும் நீரை மீன் வளர்ப்பிற்காக தடுப்பு அமைத்து வேறு கண்மாய்களுக்கு திருப்பி விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தென்கால், நிலையூர் பெரிய கண்மாய் உள்ளிட்ட  20க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு நீராதரமாக விளங்குவது நிலையூர் கால்வாய். சுமார் 21 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த கால்வாய் மூலம் வைகை நீர் கண்மாய்களை நிரப்புகிறது.

இதன் மூலம் சுமார் 2,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கால்வாய் நீரை மீன் வளர்ப்புக்காக திருப்பி விடுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் கூறுகையில், ‘‘நிலையூர் கால்வாயில் வரும் தண்ணீர் மூலம் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய், நிலையூர் பெரிய கண்மாய்கள் இன்னும் அதன் முழு கொள்ளவை எட்டவில்லை. இந்நிலையில் நாகமலை புதுக்கோட்டை அருகே மொட்டகழுங்கு என்ற இடத்தில் கால்வாயில் கான்கரீட் அமைக்க பயன்படும் கம்பிகள் மூலம்  திருட்டுத்தனமாக தடுப்பு அமைத்து துவரிமான் கண்மாய்க்கு தண்ணீரை திருப்பி விட்டுள்ளனர்.

மீன்கள் வளர்க்கவே குத்தகைதாரர்கள் திருப்பி விடுகின்றனர். இதனால் விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே கண்மாய் நீரை தடுத்து வேறு பகுதிக்கு அனுப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு நீரை முறையாக அனுப்ப வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: