சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை வீட்டு வசதி நிறுவன இயக்குநர் சைலேஷ்குமார் யாதவ் ஆகியோர் நாளை ஓய்வு பெற உள்ளனர். ஓய்வு பெறும் நாள் வார விடுமுறை என்பதால், தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று மாலை அணிவகுப்பு மரியாதை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் டிஜிபிக்கள் சீமா அகர்வால், அபய் குமார் சிங், சந்தீப் ராய் ரத்தோர், வன்னியபெருமாள், வெங்கட்ராமன், வினித்தேவ் வாங்டே, சஞ்சய் மாத்தூர் மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண், ஆவடி காவல்துறை கமிஷனர் சங்கர், தாம்பரம் காவல்துறை கமிஷனர் அபின் தினேஷ் மோடக், சென்னை பெருநகர கூடுதல் கமிஷனர்கள், திருச்சி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி போலீஸ் கமிஷனர்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள், அனைத்துமாவட்ட எஸ்பிக்கள் கலந்து கொண்டனர்.
பிரிவு உபாச்சார விழாவிற்கு வருகை தந்த டிஜிபி சங்கர்ஜிவால் மற்றும் காவல்துறை வீட்டு வசதி நிறுவன டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் ஆகியோரை புதிய டிஜிபியாக பதவியேற்க உள்ள வெங்கட்ராமன் மற்றும் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அப்போது காவல் இசைக்குழுவின் பேன்டு வாத்தியங்களுடன் இருவரும் தனித்தனியாக விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர், காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட கவாத்து அணி வகுப்பு மரியாதையை டிஜிபி சங்கர் ஜிவால் ஏற்றுக்கொண்டார். பின்னர் தமிழ்நாடு காவல்துறை சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
அதைதொடர்ந்து பிரிவு உபசார நிகழ்ச்சியில் டிஜிபி சங்கர்ஜிவால் பேசியதாவது: இந்தியாவின் மிகப்பெரிய மாநகரங்களில் ஒன்றான சென்னையில் காவல் ஆணையராகவும், இந்தியாவின் மிகவும் முற்போக்கான மற்றும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் காவல்துறைக்கு தலைமை இயக்குநராகவும் மற்றும் படைத் தலைவராகவும் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த முதல்வருக்கு நான் நன்றி கூறுகிறேன். நாங்கள் எந்த வழிகாட்டுதலை கொடுத்தாலும், என்ன தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்தாலும், எங்கள் சாதனைகள் என்று நாங்கள் எதைச் சொன்னாலும், அவை உங்கள் செயல்களின் விளைவுகளே அன்றி வேறில்லை. எனக்காகவும் என்னைப் பற்றியும் அன்பான வார்த்தைகளைக் கூறிய என் அருமை நண்பர் அருணுக்கு நன்றி. எனது மூத்த அதிகாரி பிரமோத் குமார், எனது பணியைப் பாராட்டியதற்கு நன்றி. காவல்துறை என்பது தான் படிநிலை அமைப்பைக் கொண்ட ஒரே துறை. வேறு எந்தத் துறைக்கும் காவல்துறைக்கு இருப்பது போன்ற நல்லுறவோ, ஒருமைப்பாடோ இல்லை. அதனுடன் நாம் வளர்கிறோம், எல்லா வகையிலும் நாம் அதைச் சார்ந்தவர்கள். எனவே என் நன்றிகள். இவ்வாறு டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார்.
