சித்தூர்: சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை மூலவருக்கு புஷ்ப காவடி சமர்ப்பணம் செய்யப்பட்டது. இரவு உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி கோயிலில் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியொட்டி 21 நாட்கள் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 9 மணியில் இருந்து 10மணிக்குள் கோயிலில் உள்ள தங்ககொடி மரத்தில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பிரம்மோற்சவ கொடியை ஏற்றினர். தொடர்ந்து மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்றிரவு விநாயகர் அம்ச வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி கோயில் வளாகம் முழுவதும் பூக்கள் மற்றும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
