சென்னை: வேளச்சேரியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு, பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வுக்கான சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: “உங்களுடன் ஸ்டாலின்“ திட்டத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் 6232 முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. மொத்தம் 10,000 முகாம்கள் வரை நடத்தப்பட இருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் நடந்துள்ள முகாம்களின் எண்ணிக்கை 4,419. ஏறத்தாழ 45% முகாம்கள் நடந்துள்ளது.
சென்னையில் முதற்கட்டமாக 109 முகாம்கள் என்று அறிவிக்கப்பட்டு, 109 முகாம்களும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்ட முகாம்கள் கடந்த 19ம் தேதி முதல் அடுத்த மாதம் 14ம் தேதி வரை 148 முகாம்கள் என்று அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னையில் மட்டுமே நடத்தப்பட்டு இருக்கிற முகாம்களின் எண்ணிக்கை 152. இந்த முகாம்களில் சென்னையில் மட்டுமே பெறப்பட்டிருக்கிற மனுக்களின் எண்ணிக்கை 3,40,689. பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்தோடு அவரவர் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்ற வகையில் முகாம்களுக்கு வருகிறார்கள். இதில் ஆயிரக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர். இவ்வாறு கூறினார்.
