உடுமலை ரயில் நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது

உடுமலை, டிச. 11:   உடுமலை ரயில் நிலையம் வழியாக ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  மழைக்காலங்களில் நோய்ப்பரவலுக்கு முக்கிய காரணியாக அமைவது  சுகாதாரமற்ற குடிநீராகும். எனவே பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீரை வழங்குவது மிகவும் முக்கியமானது. இந்தநிலையில் உடுமலை ரயில் நிலையத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.கடந்த 2018-19 ம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ 4 லட்சத்து 30 ஆயிரம் செலவில் இந்த குடிநீர் சுத்திகரிப்பு கருவி உடுமலை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டது. பயன்பாட்டுக்கு வந்து சில மாதங்கள் மட்டுமே செயல்பட்ட இந்த சுத்திகரிப்பு இயந்திரம் தற்போது பழுதடைந்து செயல்படாமல் உள்ளது.

இதனால் பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பது சிரமமாகிறது.  கூடுதல் செலவு செய்து பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரையோ அல்லது சுகாதாரமற்ற குடிநீரையோ பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. உடுமலை ரயில் நிலையம் வழியாக தற்போது பாலக்காடு சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கத் தொடங்கியுள்ளது. படிப்படியாக அனைத்து ரயில்களும் இயக்கப்பட உள்ள நிலையில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் உடுமலை ரயில் நிலையத்தை பயன்படுத்தத் தொடங்குவர். எனவே பயணிகளின் நலன் கருதி குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பழுது நீக்கி பயன்பாட்டுக்குக்கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: