தஞ்சை வட்டாரத்தில் மழையால் பாதித்தோருக்கு நிவாரண உதவிகள் எம்பி வைத்திலிங்கம் வழங்கினார்

தஞ்சை, டிச. 11: தஞ்சை வட்டாரத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் நேற்று வழங்கினார். தஞ்சை பழைய கலெக்டர் அலுவலகத்தில் சமீபத்தில் பெய்த தொடர்மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கோவிந்தராவ் தலைமை வகித்து பேசியதாவது: தஞ்சை மாவட்டத்தில் தற்போது அதிகளவில் மழை பெய்துள்ளது. இந்த மழையால் 25 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கி தற்போது தண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட வயல்கள் கணக்கெடுப்பு நடக்கிறது. விரைவில் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். இந்த மாதம் இறுதி வரை மழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார். தஞ்சை வட்டத்தில் மழையால் உயிரிழந்த ஒருவர் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.4 லட்சம், 3 கால்நடைகள் உயிரிழப்புக்கு ரூ.85 ஆயிரம் மற்றும் 234 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அதற்கு ரூ.10,48,600 இழப்பீடாக மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் வழங்கினார். முன்னாள் எம்பி பரசுராமன், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் காந்தி, மோகன், துரை.வீரணன், முன்னாள் மேயர் சாவித்ரி கோபால், வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, தாசில்தார் வெங்கடேஸ்வரன் பங்கேற்றனர்.

Related Stories: