கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா ஆலய தேர்பவனி

கன்னியாகுமரி டிச. 11: கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, நற்கருணை ஆராதனை, செபமாலை திருப்பலி உள்ளிட்டவை நடந்தன. 9 ம் திருவிழாவான நாளை (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பழைய கோயிலில் திருப்பலி நடக்கிறது. காலை 6.15 மணிக்கு திருப்பலியும் 8 மணி முதல் 9 மணி வரை திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும் 10.30க்கு நோயாளுக்கான திருப்பலியும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு பிள்ளைத் தோப்பு பங்குத்தந்தை  அமுதவளவன் தலைமை வகித்து அருளுரை ஆற்றுகிறார். மாலை 6.30க்கு சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. நிகழ்ச்சிக்கு திருநயினார்குறிச்சி பங்குத்தந்தை லியோன்கென்சன் தலைமை வகிக்கிறார். நாகர்கோவில் பங்குத்தந்தை  ஜாண்சன் அருளுரை ஆற்றுகிறார். இரவு 8 மணிக்கு வாண வேடிக்கையும் 9 மணிக்கு சூசையப்பர் தங்கத்தேர் பவனியும் நடக்கிறது.

10ம் திருவிழாவான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30க்கு தங்கத்தேர் திருப்பலி நடக்கிறது.

நிகழ்ச்சிக்கு கோட்டாறு மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர்ரெமிஜியுஸ் தலைமை வகிக்கிறார். காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவுத் திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு மறை மாவட்ட நிதி காப்பாளர் அலாய்சியஸ்பென்சிகர்  தலைமை வகிக்கிறார். மறை மாவட்ட அனைத்து பள்ளிகளின் கண்காணிப்பாளர் பெலிக்ஸ்அலெக்சாண்டர் அருளுரை ஆற்றுகிறார். காலை 8 மணிக்கு ஆங்கிலத் திருப்பலி நடக்கிறது.  9 மணிக்கு இரு தங்கத் தேர் பவனி நடக்கிறது. பின்னர் 10.30க்கு மலையாளத் திருப்பலி நடக்கிறது.  பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கமும் நற்கருணை ஆசிரும் நடக்கிறது.  விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்டனி அல்காந்தர், இணை பங்குதந்தைகள் லெனின், சுரேஷ், பங்குபேரவை துணைத்தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியாவில்லவராயர், துணைசெயலாளர் தினகரன், பொருளாளர் ஆன்றின்செல்வகுமார், பங்குபேரவை நிர்வாகிகள் மற்றும் பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.

Related Stories: