திருவலம் அடுத்த சுகர்மில் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் நெடுஞ்சாலை துறையினர் அதிரடி

திருவலம், டிச.11: காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த ஆரிமுத்துமோட்டூர் ஊராட்சிக்குட்பட்ட திருப்பாகுட்டை-ஏரந்தாங்கல் சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக போலீசார் அறிக்கை அளித்துள்ளனர். இச்சாலையானது திருவலம்-காட்பாடி நெடுஞ்சாலையில் இணைக்கும் கிராம சாலையாக உள்ளது. இதனையடுத்து 2019ம் நிதியாண்டில் ₹25 லட்சம் மதிப்பீட்டில் நெடுஞ்சாலை துறையினர் சாலை சந்திப்பினை மேம்படுத்தும் திட்டத்தினை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், சுகர்மில் பஸ்நிறுத்தம் அருகே உள்ள திருப்பாக்குட்டை-ஏரந்தாங்கல் சாலையோரம் பல்வேறு கடைகள் மற்றும் குடியிருப்புகள் கட்டி சிலர் ஆக்கிரமித்திருந்தனர். இதனையடுத்து, நெடுஞ்சாலை துறை காட்பாடி கோட்டப்பொறியாளர் சரவணன் உத்தரவின் பேரில் உதவி கோட்டப்பொறியாளர் சுகந்தி பரிந்துரையில் உதவிபொறியாளர் பூவரசன் தலைமையில் ஆர்.ஐ.கனிமொழி மேற்பார்வையில் சாலைப்பணியாளர்கள் நேற்று காலை ஆக்கிரமிப்பு கட்டிடங்களை ஜேசிபி மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, திருவலம் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியிலும், மின்வாரித்துறையினர் மின்சார பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு சில கட்டிடங்களை அகற்றும் போது அங்கு ஆக்கிரமிப்பு செய்திருந்த சிலர் தாங்கள் கட்டியுள்ள கட்டிடங்களுக்கு உரிய பட்டா இருப்பதாகவும், கட்டிடங்களை தற்போது இடிக்க வேண்டாம் எனவும் கூறினர். மேலும் தங்களுக்கு ஒரு நாள் அவகாசம் வழங்குமாறும் அப்பகுதியில் வருவாய்துறையினர் முறையாக அளந்து அடையாளம் காண்பித்து பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்றும்படியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சம்பவ இடத்தில் வருவாய்த்துறையினர் எவரும் வராத காரணத்தால் அதிகாரிகள் செய்வதறியாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை கைவிட்டனர்.

இதனையடுத்து ஆக்கிரமிப்பாளர்களிடம் வருவாய்துறையினர் நேரில் வந்து சம்பந்தப்பட்ட இடத்தை அளந்து அடையாளம் காண்பித்த பிறகு மேற்கொண்டு பணிகளில் ஈடுபடுவதாகவும் கூறி அங்கிருந்து சென்றனர். இச்சம்பவத்தால் சுமார் 3 மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. படவிளக்கம் : திருவலம் அடுத்த சுகர்மில் பஸ்நிறுத்தம் திருப்பாக்குட்டை-ஏரந்தாங்கல் சாலையாரம் ஆக்கிரமித்திருந்த கட்டிடங்களை நெடுஞ்சாலை துறையினர் நேற்று அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: