மாநகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

*கொசுப்புழு ஒழிப்பு மும்முரம்

நாமக்கல் : நாமக்கல் மாநகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்க உள்ளது. இதையொட்டி, நாமக்கல் மாநகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாநகராட்சியில் உள்ள 39 வார்டுகளிலும், மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் உத்தரவின்படி, தற்காலிக கொசுஒழிப்பு பணியாளர்கள் தினமும் சென்று டெங்குவை பரப்பும் கொசுப்புழுக்கள் பரவலை தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தண்ணீர் அதிகம் தேங்கும் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் அங்குள்ள மக்களை சந்தித்து மூடியுடன் கூடிய பாத்திரத்தில் தான் தண்ணீரை சேமித்துவைக்க வேண்டும்.

சிமெண்ட தொட்டிகள், கட்டிடத்துடன் சேர்த்து கட்டப்பட்டுள்ள திறந்தவெளி சிமெண்ட் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைக்ககூடாது என அறிவுறுத்தி வருகின்றனர்.

தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ள பெரிய பாத்திரங்களில் கொசுப்புழு உற்பத்திக்கான அறிகுறிகள் காணப்படும் இடங்களில் டெம்மிபாஸ் என்ற தடுப்பு மருந்துகளை ஊற்றி பொதுமக்களுக்கு மாநகராட்சி பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இது குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், சுகாதார அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் கூறியதாவது:

நாமக்கல் மாநகரில், மழை காலத்தில் டெங்கு பரவலை முற்றிலுமாக தடுக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இப்போதே எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிமெண்ட் தொட்டிகளில் தண்ணீர் சேமித்து வைக்ககூடாது.

பெரும்பாலான சிமெண்ட் தொட்டிகளில் மூடிகள் கிடையாது. இதன் காரணமாக பல நாட்களாக தண்ணீர் திறந்த வெளியில் சேமித்துவைக்கும் போது, டெங்குவை பரப்பும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகிவிடுகிறது. இதை தடுக்க பொதுமக்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்படுகிறது. சிமெண்ட் தொட்டிகளில் தண்ணீர் சேகரித்து வைத்து கொசுப்புழுக்கள் உற்பத்தி இருப்பது தெரியவந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

பொதுமக்கள் சின்டெக்ஸ் டேங்க் மற்றும் மூடி அமைப்புடன் கூடிய பெரிய பாத்திரங்கள், காற்றுபுகாத வகையில் உள்ள பாத்திரங்களில் மட்டுமே தண்ணீரை சேமித்து வைக்கவேண்டும். கொசுப்புழு தடுப்பு நடவடிக்கையில் மாநகராட்சியில் பணியாற்றும் 48 தற்காலிக பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் தினமும் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று சிமெண்ட் தொட்டிகளில் தண்ணீர் சேமித்து வைத்திருந்தால அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விளக்கி வருகின்றனர். சிமெண்ட் தொட்டிகளில் கொசுப்புழு உற்பத்தி தெரியவந்தால் தண்ணீரை வெளியே கொட்டிவிட்டு, பாதுகாப்பாக தண்ணீரை சேமித்து வைக்கவேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: