காரமடை, ஆக.23: காரமடை அரசு பள்ளி மாணவி கேள்விக்கு சமூக வலைத்தளத்தில், அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். சாத்தியமாகும் உயர் தொழில்நுட்ப கல்வி என்ற தலைப்பில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளி மாணவர்களின் கேள்விக்கு அவ்வப்போது பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் காரமடை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் -1 மாணவி ஹர்ஷிதா, ‘‘மாநில கல்விக்கொள்கை 2025-ல் குறிப்பிட்டுள்ளது போல கிராமப்புற பள்ளிகளிலும் ஏஐ, ரோபோட்டிக்ஸ் போன்ற உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைப்பது எப்படி சாத்தியமாகும்?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘‘டிஎன் ஸ்பார்க் திட்டம் வட்டார அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு, கிராமப்புற பள்ளிகளுக்கும் உயர் தொழில்நுட்ப வசதிகள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. வானவில் மன்றம் மூலமாக தொலைதூர பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப அறிவு, அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் திறன்களை வளர்த்துக்கொள்ள வழிவகை செய்யப்படுகிறது’’ என பதில் அளித்துள்ளார்.
