சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார்பில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் நடைமுறையையும், ஓட்டுத்திருட்டு குற்றச்சாட்டுக்குள்ளாகி உள்ள தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட சென்னை மாவட்ட தலைவர் ரபீக் ராஜா தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர்கள் சித்திக், அன்சார், யாசர், முஹ்சின், பெரோஸ், வடசென்னை மாவட்டச் செயலாளர் ஜாவித், பொருளாளர் காஜா, மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப்பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘வாக்குத் திருட்டு விஷயத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு கடந்த சில ஆண்டுகளாக நடந்த தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க ஒரு நீதி விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும்.
சிறப்பு தீவிர திருத்தம் முறை, ஜனநாயகத்தை படுகுழிக்கு இழித்து செல்லும் செயல். இந்த நடைமுறையால் தமிழகத்தில் பல லட்சம் வட இந்திய வாக்காளர்கள் சேர்க்கப்படுவதற்கான மறைமுக திட்டமிடுதல் உள்ளது. இது தமிழகத்தின் அரசியல் சூழலை மாற்றுவதற்கான ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் கூட்டுச்சதி\\” என்றார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
