வங்கி தேர்வுக்கு இலவச பயிற்சி

சிவகங்கை, டிச.10:சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இப்பயிற்சி மையத்தின் மூலம் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தற்போது ஸ்டேட் வங்கியில் 2 ஆயிரம் வங்கி அலுவலர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, இப்பணிக்கான முதல் நிலை தேர்வு டிச.31, ஜன.2, ஜன.4 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக இன்று முதல் நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்புகளில் சம்பந்தப்பட்ட பாட பிரிவுகளில் அனுபவமிக்கவர்களும், போட்டித் தேர்வுகளுக்கு ஏற்கனவே பயிற்சி அளித்துள்ள வல்லுநர்களும் பயிற்சி அளிக்க உள்ளனர். பயிற்சி வகுப்புகளின் போது பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பெயரை பதிவு செய்து மத்திய, மாநில அரசினால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள், வினா வங்கிகள், புத்தகங்கள் ஆகியவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: