நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் வறண்டு கிடக்கும் ரெங்கசமுத்திரம் கண்மாய் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

சின்னாளபட்டி, டிச. 10: ஆத்தூர் ஒன்றியத்தில் சிறுமலையில் ஆணைவிழுந்தான் ஓடை, வெள்ளியங்கிரி ஓடை, காந்திகிராமம் ஓடை, வெள்ளோடு ஓடை, அரமணை ஓடை, ரெட்டபுத்து ஓடை, ராமக்காள் ஓடை என 10க்கும் மேற்பட்ட ஓடைகள் உள்ளன. சிறுமலையில் பெய்யும் மழைநீர் இந்த ஓடைகள் மூலம் காந்திகிராமம், தொப்பம்பட்டி, செட்டியபட்டி, கலிக்கம்பட்டி, அம்பாத்துரை, முன்னிலைகோட்டை, ஆலமரத்துப்பட்டி, எம்.பஞ்சம்பட்டி, பிள்ளையார்நத்தம், ஆகிய கிராமஊராட்சிகளில் உள்ள குளங்களுக்கு செல்லும்.பஞ்சம்பட்டி பிரிவு,  வெள்ளோடு பகுதியில் நீர்வரத்து கால்வாய்களை அடைத்து தனியார் சிலர் தொழிற்சாலைகளை கட்டியுள்ளனர். இதனால் ஆலமரத்துப்பட்டி, என்.பஞ்சம்பட்டி, பிள்ளையார்நத்தம் ஊராட்சிக்கு நிலத்தடிநீர் ஆதாரமாக உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ரெங்கசமுத்திரம் கன்மாய் வறன்டு கிடக்கிறது.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சுமார் ரூ.2 லட்சம் செலவில் ரெங்கசமுத்திரம் கண்மாயில் உள்ள முட்செடிகளை மட்டும் அகற்றிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிறுமலையிலிருந்து வரும் நீர்வரத்து பாதைகளை சீரமைக்கவில்லை.

இதனால் தொடர்ந்து மழை பெய்தும் ரெங்கசமுத்திரம் கண்மாய் சிறிதும் நிரம்பவில்லை. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று  வருவதுடன், குடிநீர் பஞ்சம் உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரெங்கசமுத்திரம் கண்மாய்க்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: