சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த கவுசல்யா 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்த திமுகவை சேர்ந்த உமா மகேஸ்வரியின் செயல்பாடு திருப்தி இல்லை எனக்கூறி அவர் மீது 24 கவுன்சிலர்கள் நகர்மன்ற ஆணையர் நாகராஜனிடம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்தனர். அதன் பேரில் கடந்த மாதம் 2ம் தேதி நடந்த குரல் வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 28 கவுன்சிலர்களும், எதிராக ஒரு கவுன்சிலரும் வாக்களித்தனர். இதனால் சேர்மன் உமா மகேஸ்வரி பதவி பறிக்கப்பட்டது.
இந்நிலையில் நகராட்சி விதிகளின்படி குரல் வாக்கெடுப்பு நடத்தியது தவறு எனக்கூறி உமா மகேஸ்வரி சார்பில் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூலை 17ம்தேதி வாக்குச்சீட்டு மூலம் வாக்கெடுப்பு நடத்தி, அதனை முழுவதும் வீடியோ பதிவு செய்து ஜூலை 18ம்தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் 18ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்குச்சீட்டு மூலம் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 28 கவுன்சிலர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் உமா மகேஸ்வரியின் சேர்மன் பதவி பறிபோனது.
இந்த முடிவு குறித்து நகராட்சி சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆக.18ம் தேதி காலை 10.30 மணிக்கு (நேற்று) நகராட்சி தலைவர் தேர்தல், வாக்குச்சீட்டு மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று புதிய தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னாள் சேர்மன் உமாமகேஷ்வரி, 17வது வார்டு திமுக கவுன்சிலர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்கவில்லை.
திமுக சார்பில் 6வது வார்டு கவுன்சிலர் கவுசல்யா வெங்கடேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக சார்பில் 26வது வார்டு கவுன்சிலர் அண்ணாமலை புஷ்பம் வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரியும் நகராட்சி ஆணையருமான சாம் கிங்ஸ்டன் முன்னிலையில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் திமுக வேட்பாளர் கவுசல்யா வெங்கடேஷ் 22 வாக்குகள் பெற்றார்.
அதிமுக வேட்பாளர் அண்ணாமலை புஷ்பம் 6 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். அதிமுகவை சேர்ந்த 7 கவுன்சிலர்கள் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த கவுசல்யா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் நகராட்சி தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
