டி.சி தர மறுத்ததால் ஆத்திரம் அரசு கல்லூரியில் புகுந்து பேராசிரியர் மீது தாக்குதல்: மாணவர் கைது

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் இயங்கிவரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவரான பேராசிரியை சந்தனமாரி பொறுப்பு முதல்வராக இருந்து வருகிறார். கல்லூரியில் மண்ணியல் துறையில் பயின்று இடையில் நின்ற கூசாலிபட்டியை சேர்ந்த மனோஜ் என்ற மாணவர், நேற்று கல்லூரிக்கு வந்து மாற்றுச் சான்றிதழ் தருமாறு பேராசிரியை சந்தனமாரியிடம் கேட்டுள்ளார். அவர், கல்லூரிக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை உள்ளதால் டிசியை தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மனோஜ், ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு நின்றிருந்த உடற்கல்வி பிரிவு கவுரவ பேராசிரியர் பூபதி ராஜன், மனோஜை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனோஜ் அவரை தாக்கினாராம். இதில் காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவர் மனோஜை பிடித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிந்த போலீசார், மனோஜை கைது செய்தனர்.

Related Stories: