அமைச்சர் பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் ஈடி ரெய்டு: ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை என தகவல்

சென்னை: தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி கடந்த 2006-2011 காலக்கட்டத்தில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தபோது 2 கோடியே 1 லட்சத்துக்கு 35 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி, மகன்கள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் கடந்த 2012ல் இந்த வழக்கிலிருந்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் அவர்களை விடுவித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதா? என விசாரணை நடைபெற்று வருகிறது.

அதேபோல கடந்த 2006-11 காலகட்டத்தில் உளவுத்துறை ஐ.ஜியாக இருந்த முன்னாள் டிஜிபிக்கு தமிழக அரசு வீட்டுவசதி வாரியம் சார்பில் நிலம் ஒதுக்கப்பட்டது. அங்கு வர்த்தக நோக்கில் அடுக்குமாடு குடியிருப்பு கட்டி அதன் மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்ததாக அந்த அதிகாரி மீது 2011ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை கடந்த 2020 ல் அமலாக்கத்துறை கையில் எடுத்து விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக 2022ல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சம்மன் அளித்து வரவழைத்து 9 மணி நேரம் விசாரித்தனர்.

இந்நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன் எம்எல்ஏ செந்தில்குமார், மகள் தொடர்புடைய 6க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, சென்னையில் அபிராமபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் ரோஜா இல்லத்தில் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள், சிஆர்பிஎப் வீரர்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் அவரது அறையில் 4 அமலாக்கத்துறை அதிகாரிகள் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்போடு சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லத்திற்கு அதிகாரிகள் சென்று சோதனை நடத்த முற்பட்டபோது திமுகவினர் உள்ளே விடவில்லை. 40 நிமிடங்கள் கழித்து சிஆர்பிஎப் வீரர்கள் வரவழைத்து சோதனை மேற்கொண்டனர். சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனையில், விவரங்கள் குறித்த தகவலை பிரிண்ட் எடுத்து கையெழுத்து வாங்குவதற்காக ஐ.பெரியசாமி வீட்டிற்குள் பிரிண்டர் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல, ஐ.பெரியசாமியின் வீடு திண்டுக்கல் அசோக் நகரில் உள்ளது. அங்கும் நேற்று காலை 7.30 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திண்டுக்கல் வள்ளலார் நகரில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா வீட்டிலும் சோதனை நடத்தினர்.

அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராகவும், பழநி எம்எல்ஏவாகவும் உள்ளார். இவரது வீடு சீலப்பாடியில் உள்ளது. இங்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பட்டிவீரன்பட்டி அருகே வத்தலக்குண்டு – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை சேவுகம்பட்டி பிரிவில், அமைச்சர் ஐ.பெரியசாமியின் இளைய மகன் பிரபுவிற்கு சொந்தமான மில்லிலும் சோதனை நடந்தது. அங்கு துப்பாக்கி ஏந்திய சிபிஆர்எப் போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையறிந்து அங்கு திமுகவினர் குவிந்தனர்.அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் காலை 7.30 மணிக்கு துவங்கிய சோதனை மாலை 6.30 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 11 மணி நேரம் சோதனை நடந்தது.ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

* திமுகவை அச்சுறுத்த முடியாது: கனிமொழி
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, கூறும்போது, ‘‘மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு ஒருபுறம் தேர்தல் கமிஷனை தனது கையில் வைத்துக்கொண்டு அவர்கள் உதவியோடு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் போன்ற பல தாக்குதல்களை ஜனநாயகத்தின் மீது ஏவி விட்டு தேர்தலில் வெற்றி பெற துடித்துக் கொண்டிருக்கிறது. தற்போது அமைச்சர் ஐ.பெரியசாமி மீது அமலாக்கதுறையை ஏவி விட்டுள்ளனர். ஈ.டி, ஐ.டி, சி.பி.ஐ ஆகியவற்றை ஒன்றிய பாஜ அரசு எதிர்க்கட்சிகளை தாக்கும் கருவிகளாக பயன்படுத்தி வருகிறது. அமைச்சர் பெரியசாமி எத்தனையோ சிக்கல்களை கடந்து சோதனை காலத்திலும் திமுகவில் தீவிரமாக பணியாற்றி வருபவர். ஈ.டி, ஐ.டி, சி.பி.ஐ என எந்த பயமுறுத்தலாலும் திமுகவினரை ஒருபோதும் அச்சுறுத்த முடியாது’’ என்றார்.

* தீக்குளிக்க முயன்ற தொண்டர்
அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டின் முன் சின்னாளபட்டியை சேர்ந்த திமுக தொண்டர் சரவணன் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். திமுகவினர் உடனடியாக அவர் மீது தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்தினர். தகவலறிந்த அமைச்சர் வெளியே வந்து தொண்டர்களை அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.

Related Stories: