கருப்பத்தூர் அரசு பள்ளி வளாகத்தில் உலக மண்வள தின விழாவில் திரளான விவசாயிகள் பங்கேற்பு

கரூர், டிச. 9: கரூர் மாவட்டம் கருப்பத்தூரில் நடைபெற்ற உலக மண்வள தின விழாவில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டம் கருப்பத்தூர் ஊராட்சி அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் உலக மண்வள தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குநர் சிவசுப்ரமணியன் தலைமை வகித்து பேசியதாவது: தேசிய நீடித்த நிலையான வேளாண்மை திட்டம், மண்வள அட்டை இயக்கத்தின்கீழ், எட்டு வட்டாரங்களில் 53 கிராமங்களில் செயல்விளக்க பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இங்கு வேளாண்மை வட்டார அலுவலர்களால் நேரிடையாக 5095 மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மண் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த அட்டையில் மண்ணில் உள்ள உப்பின் நிலை, கார அமில தன்மை, தழை, மணி மற்றும் சாம்பல் சத்தின் அளவு, அங்ககசத்து மற்றும் நுண்ணூட்ட சத்துகளின் அளவும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

அதற்கேற்ப பரிந்துரைகளும் குறிப்பிடப்பட்டு இருக்கும். மண்வள அட்டைகளில் கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு ஏற்ப உரமிடும் போது விவசாயிகளுக்கு உரச்செலவு குறைவதோடு மண்ணின் வளமும் காக்கப்படும். எனவே அனைத்து விவசாயிகளும் மண் பரிசோதனை செய்து உரமிடுவதன் மூலம், உரச்செலவினை குறைத்தும், மண் வளத்தினை காத்து, பயிர்களின் மகசூலை பெருக்கலாம் என்றார். இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமாபதி, இந்திய வேளாண்மை மைய தலைவர் திரவியம் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் உட்பட அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: