வரும் 17ம் தேதி 92வது பிறந்தநாள் தர்மபுரியில் முரசொலி மாறன் படத்திற்கு முதல்வர் மரியாதை: சென்னையில் திமுக முன்னணியினர் சிலைக்கு மாலை அணிவிக்கின்றனர்

சென்னை: முரசொலி மாறனின் 92வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 17ம் தேதி தர்மபுரியில் அவரது படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். சென்னை முரசொலி வளாக முகப்பிலுள்ள முரசொலி மாறன் சிலைக்கு திமுக முன்னணியினர் மாலை அணிவிக்கின்றனர். இதுகுறித்து சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை:

திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே திட்டமிட்டபடி தர்மபுரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருப்பதால் கலைஞரின் மனச்சாட்சியாக விளங்கியவரும்-திமுகவின் மூளையாக செயல்பட்டவரும்-ஒன்றிய அமைச்சராக இருந்து அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்று மிகச் சிறப்பாக பணியாற்றியவருமாகிய முரசொலி மாறனின் 92வது பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 17 அன்று தர்மபுரியில் முரசொலி
மாறனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அதேநேரத்தில் வருகிற 17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் கோடம்பாக்கம், `முரசொலி’ அலுவலகத்தில் அமைந்துள்ள முரசொலி மாறன் உருவச் சிலைக்கு திமுக முன்னணியினர் மலர்மாலை அணிவிக்கின்றனர். அதுபோது, ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட, பகுதி, வட்ட திமுக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட திமுக தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: