சுதந்திர தினம், தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு: சென்னை-மதுரைக்கு ரூ.2,500; சென்னை – நெல்லைக்கு ரூ.3,300, கட்டண கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க பயணிகள் கோரிக்கை

சென்னை: சுதந்திர தினம், தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர் செல்வோரிடம் ஆம்னி பேருந்தில் பயணிக்க பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதாக பயணிகள் குற்றச்சாட்டியுள்ளனர். சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வரவுள்ளது. அதேபோல், ஆடி மாதம் என்பதால், தங்களின் சொந்த ஊர்களில் கோயில் திருவிழாக்கள் களைகட்டி வருவதையொட்டி சென்னையில் இருந்து பொதுமக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

போக்குவரத்து துறை சார்பில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கடந்த புதன்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து முனையங்களில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் பயணிக்க முன்னதாகவே 67 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதனிடையே ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் இறுதியில் நாடுவது ஆம்னி பேருந்துகளாக தான் உள்ளன.

ஆனால், அந்த பேருந்துகளில் கட்டண கொள்ளை நடப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகப்படியானோர் பயணிப்பதால் அவற்றின் தேவையை உணர்த்து கட்டணம் பல மடங்கு உயர்த்தி வசூலிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல சாதாரணமாக ரூ.560 முதல் ரூ.1,500 வரை கட்டணம் இருக்கும். குளிர்சாதன வசதி இருக்கும் பேருந்துகளில் ரூ.1,500 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆனால், தற்போது சென்னையில் இருந்து மதுரை வருவதற்கு சாதாரண பேருந்துகளிலேயே ரூ.1,200 முதல் 2,500 வரை வசூலிக்கப்படுகின்றன. ஏசி பேருந்துகளில் 3 மடங்கு அதிகரித்து டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்ல சாதாரணமாக ரூ.650 முதல் ரூ.1500 வரை கட்டணம் இருக்கும். தற்போது ஆம்னி பேருந்துகளின் கட்டணமாக ரூ.1500 முதல் ரூ.3,300 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதுமட்டுமின்றி, சென்னை – கோவை, சென்னை – நாகர்கோவில், சென்னை – தூத்துக்குடி என மாவட்டங்கள் வாரியான கட்டணம் என்பது ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை வசூலிக்கப்படுகின்றன. இதில், பேருந்து டிக்கெட் புக் செய்யப்படும் செயலிகளில் இந்த கட்டணம் வெளிப்படையாகவே வசூலிக்கப்பட்டு வருவது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தால் பயணிகள் வேறு வழியின்றி ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை பொருட்படுத்தாமல் பயணித்து வருகின்றனர்.

போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையில்,‘தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனை சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரை கொண்டு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான கட்டணம் வசூல் செய்து மற்றும் அனுமதிக்கு புறம்பாக இயக்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’என்று கூறப்பட்டுள்ளது.

* விமான டிக்கெட்டும் பல மடங்கு எகிறியது
சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் உள்நாட்டு விமானங்களில் பயணிகள் கூட்டம் நேற்று அதிகளவில் காணப்பட்டது. ஒரு சில விமானங்களில் மட்டுமே டிக்கெட்டுகள் இருந்தன. குறைந்த கட்டண டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதால், விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்தது. இதனால், விமானத்தில் பயணிக்க காத்திருந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

3 நாள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப வேண்டும் என்று அவசர நிலை காரணமாக ஒருசில பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்று விமான பயணம் மேற்கொண்டனர். பயணிகள் வருகை அதிகரித்தபடி உள்ளதால் சாதாரன விமான டிக்கெட்களில் விலை ராக்கெட் வேகத்தில் பலமடங்கு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

Related Stories: