சென்னை: தெருநாய்க்கடி சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே சமயம் நாய்களை துன்புறுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் வீதியில் அழைத்து செல்லப்பட்ட ராட்வீலர் நாய்கள் கடித்து சிறுவர், சிறுமியர், வயதானோர் பாதிக்கப்பட்டுள்ளதால் இதுபோன்ற ஆக்ரோஷமான நாய்களை வளர்க்க தடை செய்ய வேண்டும் அல்லது முறைப்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி கால்நடை துறை அதிகாரி கமால் உசேன் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், சென்னையில் 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. அவற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு இடத்தில் பிடிக்கப்படும் நாய்கள், கருத்தடை, தடுப்பூசி போடப்பட்டு, மீண்டும் அதே பகுதியில் விடப்படுகின்றன.
ஏற்கனவே சென்னையில் 5 கருத்தடை மையங்கள் உள்ளன. மேலும், 10 மையங்கள் அமைக்கப்பட உள்ளன என்று கூறப்பட்டிருந்தது. விசாரணையின் போது, எத்தனை நாய் கடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கால்நடைத்துறை அதிகாரி உத்தேசமாக கடந்த ஆண்டு 20,000 சம்பவங்கள் நடைபெற்று இருக்கலாம் என்று தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், தெரு நாய்களை பிடித்து கருத்தடை மற்றும் தடுப்பூசி போட்டு மீண்டும் அதே பகுதியில் விடுவதற்கு பதிலாக அவற்றை தனி காப்பகங்கள் அமைத்து பராமரிக்க வேண்டும்.
அவற்றுக்கு முறையான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். இது சம்பந்தமாக விரிவான திட்டத்துடன் சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தெரு நாய் கடி சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம் நாய்களை துன்புறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தினர். மேலும், தெரு நாய் பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருவதால் இந்த வழக்கின் விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
