மேட்டுப்பாளையம், ஆக.14: மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள சாலை வழியாக எல்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லலாம். இந்த நிலையில் கடந்த 11 ம் தேதி இந்த சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் எதிர்புறம் இருந்த முட்புதரில் இருந்து பிறந்து சில நாட்களே ஆன, தொப்புள் கொடி கூட அறுக்காத நிலையில் பெண் குழந்தை சடலம் உடலில் காயங்களுடன் மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த குழந்தையின் பெற்றோர் யார்? வீசி சென்றவர்கள் யார்?
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையா? அல்லது தவறான உறவு காரணமாக பிறந்த குழந்தையா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இரு தினங்களாகியும் இதுகுறித்து தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘குழந்தை சடலம் மீட்கப்பட்ட நிலையில், 72 மணி நேர சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் குழந்தையை வீசி சென்றவர்கள் யார்? என்பது குறித்த தகவல்கள் தெரியவரும்’’ என்றனர்.
