அறப்போர் இயக்கம் மீது ரூ.1.10 கோடி மானநஷ்ட வழக்கு வாக்குமூலம் பதிவுக்கு வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் எடப்பாடி வாதம்

சென்னை: அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில் அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அறப்போர் இயக்கத்தின் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி மானநஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படி அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது.

அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ் ஆஜராகி, கடந்த நவம்பர் மாதம் மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சாட்சி விசாரணைக்கு ஆஜரானார். அதன் பிறகு சாட்சி விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, சாட்சியம் அளிப்பதற்கான தேதியை தெரிவிக்கிறோம். முன்னாள் முதல்வர் என்பதால் நேரில் வந்து சாட்சியம் அளிக்க முடியாததால் வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்று கோரினார். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க கோரி மனுவாக தாக்கல் செய்யுமாறு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அறிவுறுத்தி விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: