கால்பந்து ஜாம்பவானின் புது அத்தியாயம்: ரொனால்டோவின் காத்து வாக்குல ஒரு காதல்; ரூ.38 கோடி நிச்சயதார்த்த மோதிரத்துடன் வெளியானது அறிவிப்பு

லிஸ்பன்: போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ – அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸ் இடையே திருமண நிச்சயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் ரொனால்டோ (40) – ரஷ்யாவை சேர்ந்த சூப்பர் மாடல் இரினா ஷாய்க் இடையில் 2010ல் மலர்ந்த உறவு, 2015ல் முடிவுக்கு வந்தது. அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பின், கடந்த 2016ல், மாட்ரிட் நகரில் விற்பனையாளராக பணியாற்றி வந்த ஜார்ஜினா ரோட்ரிகஸை, ரொனால்டோ சந்தித்து காதல் வயப்பட்டார். அடுத்த ஆண்டு (2017, ஜனவரி), ஜார்ஜினாவும், ரொனால்டோவும், ஃபிபா கால்பந்து விருதுகள் வழங்கும் விழாவில் முதல் முறையாக ஒன்றாக சேர்ந்து பங்கேற்றனர். இவர்களுக்கு 2017, 2022ல் இரு மகள்கள் பிறந்தனர்.

ரொனால்டோ உடனான நெருக்கத்தால் ஜார்ஜினாவும் புகழ் வெளிச்சத்தில் நனைந்தார். மாடலிங் துறையில் நுழைந்தார். நெட்ஃப்ளிக்ஸ் சீரீஸ்களில் நடிக்கவும் துவங்கி மேலும் புகழடைந்தார். இந்நிலையில், 9 ஆண்டுக்கு பின் ரொனால்டோவுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதை ஜார்ஜினா நேற்று முன்தினம் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்தார். ரொனால்டோ அணிவித்த, ரூ.38 கோடி மதிப்பிலான வைர மோதிரத்துடன் அவர் வெளியிட்ட அறிவிப்பு, உலகளவில் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இவர்கள் இடையிலான முறையான திருமண தேதி பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ரொனால்டோவின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 9,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: