8 மாதத்திற்கு பின் கல்லூரிகள் திறப்பு இறுதி ஆண்டு வகுப்புகள் துவங்கின

பரமக்குடி, டிச. 8:  கொரோனா நோய் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய  தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. எனினும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு  பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது. அடுத்த  கல்வி ஆண்டு தொடங்கி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டாலும் இன்னும்  கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. கொரோனா தொற்றின் வீரியம் படிப்படியாக குறைந்து, தமிழகத்தில் இயல்புநிலை திரும்பி வருகிறது.

இந்நிலையில் அனைத்து கல்லூரிகள்- பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு டிச.7ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கலாம் என்றும், இதில் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில், இளநிலை- முதுநிலை வகுப்புகளும் அடங்கும் என்றும், 2020-2021ம் கல்வியாண்டில் சேரும் புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் 2021 பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தொடங்கலாம் என்றும், மாணவர்கள் தங்குவதற்கு ஏதுவாக, கல்லூரி விடுதிகளையும் திறக்கலாம் எனவும் அரசு அறிவித்தது.

அதன்படி நேற்று ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, இறுதி ஆண்டு வகுப்புகள் நடந்தன. பரமக்குடி அரசு கலை கல்லூரியில் முதல்வர் குணசேகரன் உத்தரவின்பேரில் மாணவ, மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு முறைகளை செய்யப்பட்டிருந்தது. கல்லூரி வளாகத்திற்குள் நுழையும் போதே தெர்மல்ஸ்கேனர் கொண்டு காய்ச்சல் பரிசோதனை செய்து, சானிடைசர் பயன்படுத்திய பிறகே மாணவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். வகுப்பறைகளிலும் மாணவர்கள் சமூகஇடைவெளியுடன் முகக்கவசம் அணிந்த நிலையில் பேராசிரியர்கள் பாடம் கற்பித்தனர். இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், ‘கடந்த 8 மாதங்களாக வீட்டில் இருந்ததால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானோம். நீண்ட நாள்களுக்கு பிறகு நண்பர்களையும், வகுப்பறையையும் சந்தித்ததால் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது’ என்றனர்.

Related Stories: