சென்னை: சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் மெட்ரோ ரயில் நிலையத்தின் தரைதளத்தில் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஸ்டாப் கேன்டீன் செயல்பட்டு வந்தது. அந்த கேன்டீனில், சென்னை விமான நிலையத்தில் பணியாற்றும் விமான நிலைய ஆணைய ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு குறைந்த கட்டணத்தில் உணவு வழங்கப்பட்டது. விமான நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிறுவன ஊழியர்கள் ஆகியோருக்கு ஒரு கட்டணமும், விமான நிலையத்தில் பணியாற்றும் தற்காலிக ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒரு கட்டணமும், விமான பயணிகள் மற்றும் வெளி ஆட்கள் ஆகியோருக்கு ஒரு கட்டணம் என்று 4 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தன.
இதேபோல், 4 விதமான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டாலும், விமான நிலையத்தில் உள்பகுதிகளில் காபி, டீ, ரூ.250ல் இருந்து ரூ.360 வரையிலான கட்டணத்தோடு, ஒப்பிடும்போது ஏர்போர்ட் அத்தாரிட்டி ஸ்டாப் கேன்டீனில் பயணிகள் வெளியாட்கள் போன்றவருக்கு ரூ.20க்கு காபி கிடைத்தது, மிகவும் வசதியாக இருந்தது. இந்த கேன்டீன் 24 மணி நேரம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கேன்டீன் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து திடீரென மூடப்பட்டது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ஏர்போர்ட் அத்தாரிட்டி ஸ்டாப் கேன்டீனை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வந்த தனியாருக்கான ஒப்பந்தம், இந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதியுடன் காலாவதி ஆகிவிட்டது. இதையடுத்து கேன்டீன் கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து மூடப்பட்டுள்ளது. கேன்டீனை புதிதாக நடத்துவதற்கு ஒப்பந்ததாரரை தேர்வு செய்வதற்காக, டெண்டர் விடும் பணிகள் நடந்து வருகின்றன. அதிக விரைவில் புதிய ஒப்பந்ததாரர், டெண்டர் மூலம் தேர்வு செய்யப்பட்டு, கேன்டீன் மீண்டும் செயல்பட தொடங்கும் என்று தெரிவித்தனர். ஆனால் கேன்டீன் மூடப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரையில், கேன்டீன் மீண்டும் திறக்கப்படவில்லை.
இதற்கிடையே இந்திய விமான நிலைய ஆணைய ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிறுவன பணியாளர்கள் ஆகியோருக்கு விமான நிலையத்தில் உள் பகுதியில் தனியாக ஒரு கேன்டீன் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. ஆனால், அங்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாது. இதனால் விமான பயணிகள், பயணிகளை வழியனுப்ப வரவேற்று அழைத்துச் செல்ல வருபவர்கள், கார், கால் டாக்ஸி டிரைவர்கள், விமான நிலையத்தின் உள்பகுதிக்குள் செல்வதற்கு பாஸ் இல்லாமல் வெளிப்பகுதியில் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
வெளிநாடுகளுக்கு வேலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புகின்ற பெற்றோர் உறவினர்கள், வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 10 பேர், 20 பேர் கூட்டமாக சென்னை விமான நிலையம் வந்து வெளிநாட்டுக்கு செல்ல இருக்கும் பிள்ளையுடன் இந்த கேன்டீனில் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி விட்டு, கண்ணீர் மல்க பிள்ளையை வழி அனுப்பி வைத்துவிட்டு, பெற்றோர், உறவினர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பிச் செல்வது வழக்கம். அதேபோன்ற பெற்றோர், உறவினர்கள் கடந்த 6 மாதங்களாக, வெளிநாட்டுக்கு செல்லும் பிள்ளையுடன் அமர்ந்து உணவருந்தி வழியனுப்பி வைக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் நீண்ட காலம் இருந்துவிட்டு, திரும்பி வருபவர்கள் நமது தென்னிந்திய உணவான இட்லி, தோசை, பொங்கல் போன்றவைகளை குறைந்த விலையில் விரும்பி சாப்பிடுவதற்காக இந்த கேன்டீனுக்கு வருவார்கள். அவர்களும் கடந்த 6 மாதங்களாக ஏமாற்றம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
