பொறியியல் மாணவர் சேர்க்கை மூன்றாம் சுற்று கலந்தாய்வில் 64,629 இடங்கள் நிரம்பின

சென்னை: நடப்பு கல்வி ஆண்டில் பிஇ, பிடெக் மாணவர் சேர்க்கைக்கான (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) இணையவழி கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. அந்த வகையில், முதல் சுற்று கலந்தாய்வுகள் முடிந்து 3வது சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 7 முதல் 9ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 3வது சுற்று கலந்தாய்வு கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. கட் ஆப் மதிப்பெண் 143 முதல் 77.500 வரை பெற்றுள்ள மாணவர்கள் இக்கலந்தாய்வில் பங்கேற்றனர்.

இதில் அரசு நிர்வாக ஒதுக்கீட்டில் 62 ஆயிரத்து 533 பேருக்கும், அரசு 7.5 சதவிகித ஒதுக்கீட்டில் 2 ஆயிரத்து 96 பேர் என மொத்தம் 64 ஆயிரத்து 629 பேருக்கும் நேற்று காலை (ஆகஸ்ட் 10) தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைவழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் இன்று மாலை (ஆகஸ்ட் 11) மாலை 5 மணிக்குள் இடங்களை உறுதிபடுத்த வேண்டும். அதையடுத்து, நாளை காலை 10 மணிக்குள் அவர்களுக்கான இறுதி கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். அதன்பிறகு கல்வி கட்டணம் செலுத்துவது, அசல் சான்றிதழ்களை சமர்ப்பிப்பது உள்ளிட்ட சேர்க்கை நடைமுறை பணிகளை முடித்துவிட்டு மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் 17ம் தேதி மாலை 5 மணிக்குள் சேர்ந்துவிட வேண்டும்.
மொத்தம் உள்ள 1,87,227 இடங்களில் இதுவரை 1,58,046 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதம் உள்ள 29 ஆயிரம் இடங்கள் வருகிற 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ள துணைக்கலந்தாய்வு மூலம் நிரப்பட உள்ளன. அதனைத்தொடர்ந்து எஸ்.சி.ஏ மற்றும் எஸ்.சி பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழக 4 வளாக பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., மற்றும் பி.பிளான் ஆகிய படிப்புகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்றுமுதல் துவங்குகிறது. அண்ணா பல்கலை இணைப்பு நிறுவனம் மற்றும் தனியார் கல்லூரிகளில் பிஇ., பி.டெக் மற்றும் பி.ஆர்க் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

Related Stories: