நான் யாரையும் ஏமாற்ற வரல… பதவி, பொறுப்பு என்னுடைய நோக்கமே இல்லை: அன்புமணி பேச்சு

சென்னை: மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பாமக பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. 3500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 2480 பேருக்கு மட்டுமே இருக்கைகள் போடப்பட்டிருந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: எங்கள் மீது நம்பிக்கை வைத்து இன்னும் ஓராண்டு காலம் எங்களை இந்த பொறுப்பிலே தொடர வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றிய உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன். பொறுப்புகளுக்கு ஆசைப்படுவன் அல்ல நான்.

ராமதாஸ் நம்முடைய வழிகாட்டி, அவர்தான் எல்லாம். நம் இயக்கம், நமது கட்சி, இந்த சமுதாயம் அவருடைய கொள்கைகளை நாம் பின்பற்றுகின்றோம். மருத்துவர் அய்யாவுடைய பல லட்சியங்கள், பல கனவுகள் அதை நாம் எல்லோரும் சேர்ந்து நிறைவேற்றுவோம். ஒரு மெகா கூட்டணியை அமைப்போம். விரைவில், நாம் ஆட்சிக்கு வருவோம். இன்னும் ஒரு சில காலத்திலே அது நடைபெறும். உங்கள், மனதில் என்ன தோன்றுகிறது என்று எனக்கு நன்றாக தெரியும். உங்களுடைய விருப்பப்படிதான் அந்த கூட்டணியை நாம் அமைப்போம்.

எனக்கு முன்பு பேசியவர்கள் ஒரு சிலர் சொன்னார்கள். தமிழ்நாட்டிலே, நம்முடைய வாக்கு விகிதம் 6 விழுக்காடு மற்றும் 7 விழுக்காடு தான் பெற முடிந்தது. பாமக 50 அல்லது 60 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றால் நாம் ஆட்சி அமைக்கலாம். முதலில், நாம் ஆட்சி அமைப்போம் என நம்பிக்கை வைக்க வேண்டும். இப்பவும், நான் சொல்கிறேன். நம்முடைய, வழிகாட்டி மருத்துவர் ராமதாஸ் தான். அவருக்கென்று, இங்கே நிரந்தரமாக ஒரு நாற்காலி இருக்கிறது.

இது அவருடைய நாற்காலி. நான் பொறுப்புகளுக்கும், பதவிகளுக்கும் ஆசைபட்டது இல்லை. இன்று, காலத்தின் கட்டாயத்திற்காக உங்களுடைய, எண்ணங்களை நிறைவேற்றுவதற்காக இங்கே உங்கள் முன் நின்று கொண்டிருக்கின்றேன். இது, ஒரு சாதாரண இயக்கம் கிடையாது. நம் கட்சி சாதாரண கட்சி கிடையாது. ரத்தம், வேர்வை, உயிர் தியாகம் சிந்திய உயிரை நீத்து லட்சக்கணக்கானோர் உயிர் துறந்த கட்சி. இந்த இயக்கம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்த, இயக்கத்தை நம் கட்சியை நிர்வகிக்க ஒரு சூழல் இருக்கிறது. இதில், சில செய்திகள் என்னால் வெளியில் சொல்ல முடியாத ஒரு சூழல் உள்ளது. அந்த, காரணத்திற்காகத்தான் அமைதியாக உள்ளேன். நான், ஒன்னும் ரொம்ப பிடிவாதக்காரன் கிடையாது. நான், கூறுவது நம்ம எல்லாம் சேர்ந்து செயல்பட வேண்டும். 6 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு சூழ்நிலை இருந்தது கிடையாது.

எனக்கு, இந்த பதவி பொறுப்பு, எல்லாம் நிச்சயமா என் மனசுல எதுவுமே கிடையாது. எனக்கு, இந்த பதவி வேணும்னா நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிட்டு இருப்பேன். நான் யாரையும் ஏமாற்ற வரல. பதவி, பொறுப்பு என்னுடைய நோக்கமே இல்லை. இந்த, சமுதாயத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இன்றைக்கு, ராமதாசை சுற்றி இருக்கின்ற ஒரு சில சுயநலவாதிகள் ஒருதலைப்பட்சமாக செய்திகள் வெளியில் வந்து கொண்டு இருக்கிறது.

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது எனக்கு வருத்தம் தான். நான், வலியோடு தான் அந்த தீர்ப்பை எதிர் கொண்டேன். மீடியாவில், மணிக்கணக்கில் சந்தித்து நான் பேசுவேன். திருப்பி திருப்பி கேள்வி கேட்டு கொண்டே இருப்பார்கள். கடந்த, சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து ஒரு லெட்டர் வந்தது. அதில், உங்களுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற ஒரு மகிழ்ச்சியான செய்தி எனக்கு கிடைத்தது.

Related Stories: