×

புகார் முடித்து வைக்கப்பட்டது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாத 5 ஐபிஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை: தமிழக டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புகார் முடித்து வைக்கப்பட்டது குறித்து, நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்வதை உறுதி செய்ய தவறிய 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் பதிவான வழக்கு தொடர்பாக இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, புகாரை விசாரித்து புகார் முடித்து வைக்கப்பட்டு விட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி, புகாரை முடித்து வைப்பதாக இருந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். புகார்தாரருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். இதை செய்ய தவறிய செயல் நடைமுறை குளறுபடியாகும்.

வழக்கு முடித்து வைக்கப்பட்ட 2017ம் ஆண்டு முதல் இதுவரை குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் ஆய்வாளர்களாக பணியாற்றிய 11 பேருக்கு எதிராக துறைரீதியாக நடவடிக்கையை டிஜிபி எடுக்க வேண்டும். இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதா என்பதை கண்காணிக்க தவறிய காவல் கண்காணிப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எனவே, 2015ம் ஆண்டு முதல் இதுவரை காவல் கண்காணிப்பாளர்களாக பதவி வகித்த 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளான பி.சரவணன், எம்.ஸ்ரீ அபினவ், எஸ்.சக்தி கணேசன், எஸ்.ஜெயக்குமார், ஆர்.ராஜாராம் ஆகியோர் மீதும் டிஜிபி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புகார்கள் மீது விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையோ, புகாரை முடித்த அறிக்கையோ சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டியது கட்டாயம். இது சம்பந்தமாக நான்கு வாரங்களில் காவல் துறையினருக்கு உரிய அறிவுறுத்தல்களை டிஜிபி பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Tamil Nadu DGP ,Chennai ,Madras High Court ,Kullanchavadi police station ,Cuddalore district ,Judge ,P. Velmurugan ,
× RELATED செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை...