சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் ஒற்றாட்சி அரசியல் அமைப்பு விதியை நிராகரித்து தமிழத் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும். இலங்கை தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் பொ.ஐங்கரநேசன், செ.கஜேந்திரன், த.சுரேஸ், ந.காண்டீபன், க.சுகாஸ் ஆகிய தமிழ்த் தேசியப் பேரவையின் முக்கிய பிரமுகர்கள் எனது இல்லத்திற்கு வந்து என்னைச் நேரில் சந்தித்தனர். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போர் கடந்த 2009 மே மாதம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தொடர்ந்தும் தமிழர் தேசத்தில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் கட்டமைப்புகள் இன அழிப்பை தொடர்ந்து செய்து வருவதை தெளிவு படுத்தினார்கள்.
ஒற்றையாட்சி அரசியல் விதியில் 13ம் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதனால் 38 ஆண்டுகளாக தமிழர்களுக்கு எந்த அதிகாரமும் கிடைக்கவில்லை. அது மட்டுமன்றி தமிழர்கள் மீதான இன அழிப்பையும் தடுக்க முடியவில்லை. 13-ம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துமாறு இந்திய அரசு பல முறை இலங்கை அரசாங்கங்களை வலியுறுத்தி வந்துள்ள போதும் ஒற்றையாட்சி முறைமைக்குள் அதிகாரங்கள் எதனையும் வழங்க முடியாதென இலங்கை உச்ச நீதிமன்றம் 32 தடவைகள் தீர்ப்பளித்தள்ளது. இதனால் இந்தியாவின் கோரிக்கைகளும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எனவே ஒற்றையாட்சி முறைமையின் கீழ் ஒருபோதும் தமிழர்களுக்கு விடிவு கிடைக்காது. தமிழர்களின் இந்நிலையை போக்க தற்போது இலங்கையில் தொடரும் அரசியல் கட்டமைப்பை மாற்ற வேண்டும். இன அழிப்பிலிருந்து தமிழர் தேசத்தை பாதுகாக்க, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படுவதே ஒரே வழியாகும். இந்த அமைப்பு உருவாக்கப்பட்டால் மாத்திரமே இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் நோக்கமும் நிறைவேறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
