சென்னை: ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நடுத்தர, ஏழை மற்றும் உழைப்பாளி மக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கும் வகையில், ரயில் கட்டணத்தை உயர்த்த ஒன்றிய அரசு எடுத்துள்ள முடிவு முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல. குறைந்த செலவில் நீண்ட தூரம் பயணிக்க உதவும் பொதுப் போக்குவரத்து சேவையாக இருக்கும் ரயில்வே, மக்கள் நலனின் அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர,
லாப நோக்கில் கட்டண உயர்வுகளுக்கான போக்குவரத்தாக மாறக் கூடாது. ஏற்கனவே விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு நெருக்கடி, வரி சுமை ஆகியவற்றால் திணறும் நிலையில் உள்ள நடுத்தர குடும்பங்களுக்கும், ஏழை மக்களுக்கும் இந்த ரயில் கட்டண உயர்வு மேலும் சுமையையே ஏற்படுத்தும். மாணவர்கள், தொழிலாளர்கள், அரசு–தனியார் ஊழியர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட கோடிக்கணக்கான பயணிகளின் நலனுக்கு எதிரான இந்த முடிவை உடனடியாக கைவிடப்பட வேண்டும்.
எனவே, ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி, இந்த மக்கள் விரோத முடிவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
