உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் சி.வி.சண்முகம் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்தாவிட்டால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல்வர் பெயர் இடம்பெற எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பி சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்; அரசு திட்டத்தின் பெயரில், அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாத என்று கூறிய உயர்நீதிமன்றம், ஆளும் கட்சியின் பெயர், சின்னத்தை பயன்படுத்துவது உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது என கூறியதுடன், தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதல்வரின் பெயர் இடம் பெறக்கூடாது, அரசு திட்ட பெயரில் அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கௌ தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்; அரசியல் தலைவர்களின் பெயரில் நாடு முழுவதும் பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தலைவர்கல் பெயரை வைக்கக் கூடாது என்றால் அனைத்து திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அரசியல் மோதலை தீர்த்துக்கொள்வதற்கு நீதிமன்றத்தை மேடையாக பயன்படுத்தக்கூடாது. அரசியல் பிரச்சனையை தேர்தல் களத்தில்தான் பேசிக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. மேலும் சட்டத்தை தவறாக புரிந்துகொண்டு அதிமுக வழக்கு தொடர்ந்திருப்பதாக உச்ச்நீதிமன்றம் கண்டன தெரிவித்துள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் சி.வி.சண்முகம் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்தாவிட்டால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: