வெள்ளிமலையில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் காட்டெருமைகள்

கல்வராயன்மலை, ஆக. 5: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் 177 மலை கிராமங்களும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது கல்வராயன் மலைப்பகுதி முழுவதும் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இங்குள்ள மலை பாதையில் இரவு நேரங்களில் காடுகளில் உள்ள காட்டெருமைகள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால், அப்பகுதி வழியாக வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிமலையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி செல்லும் சாலையில், நேற்று முன்தினம் இரவு காட்டெருமை ஒன்று சாலையில் படுத்து கிடந்தது. அந்த வழியாக வாகனத்தில் வந்தவர்கள் இதனை பார்த்து சுதாரித்து கொண்டு தங்களது வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டனர். இதனையடுத்து வாகன ஓட்டிகள் சத்தம் எழுப்பியதை அடுத்து அந்த காட்டெருமை சாலையை கடந்து காட்டுக்குள் சென்றது. இதனிடையே மலைப்பகுதியில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாகவும், மெதுவாகவும் செல்லுமாறு வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: