75 சதவீதத்துக்கு அதிகமாக பயிர் சாகுபடி செய்யாதவர்களுக்கு காப்பீட்டு தொகை, நிவாரணம் வேண்டும்

*குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சாவூர் : 75 சதவீதத்துக்கு அதிகமாக பயிர் சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகையோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரண தொகையோ வழங்க வேண்டும் என்று தஞ்சாவூரில் நடைபெற்ற குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தலைமை தாங்கினார். இதில் வேளாண்மை உதவி இயக்குனர் அய்யம்பெருமாள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜீவக்குமார் பேசியதாவது:-தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகா செல்லப்பன்பேட்டை கிராமத்தில் பெத்தமாதுரான்ஏரி, பகடைக்குடி ஏரி, கல்லணைக்கால்வாய் மூலம் பாசனம் நடைபெறுகிறது.இதன் பாசன பரப்பு 300 ஏக்கர் ஆகும். நடப்பு ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் பல பகுதிகளில் சாகுபடி நடைபெறவில்லை. சில இடங்களில் 15 சதவீதம் சாகுபடி செய்தும் விளைச்சல் இல்லாமல் போய் விட்டது. செல்லப்பன்பேட்டை கிராமத்திலும் இதே நிலை தான்.

75 சதவீதத்துக்கு மேல் சாகுபடி செய்யாத கிராம விவசாயிகளுக்கு வழங்கும் காப்பீட்டு தொகையோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரண தொகையோ வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.ஆம்பலாப்பட்டு பாசனதாரர் சங்க தலைவர் தங்கவேல் பேசியதாவது:-

ஒரத்நாடு வோளண்மைத்துறை மூலம் சாகுபடிக்கு உளுந்து வினியோகம் செய்யப்பட்டது. ஒரத்தநாட்டில் கிலோ ரூ.100க்கும், பட்டுக்கோட்டையில் ரூ.75க்கும், மதுக்கூரில் ரூ.70க்கும் வேளாண்மைத்துறை சார்பில் விற்பனை செய்யப்படுகின்றன.விவசாயிகளுக்கு மானியம் எவ்வளவு? ஏன் இந்த மாற்றங்கள் உள்ளன. எனவே இதனை சரி செய்து விவசாயிகளுக்கு உரிய மானியத்துடன் உளுந்து விதை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர் பேசியதாவது:-
சம்பா நெற்பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். தற்போது சம்பா அறுவடை பணிகள் தொடங்கி இருப்பதால் கதிர் அறுக்கும் எந்திர உரிமையாளர்கள், அதிகரிகள், விவசாயிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டத்தை நடத்த வேண்டும்.

பயிர் காப்பீடு திட்டத்தில் பல குளறுபடிகள் உள்ளதால் இழப்பீடு கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு கைரேகை பதிவாகாமல் பல ஆயிரக்கணக்கானோருக்கு வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடனடியாக பொங்கல பரிசுத்தொகுப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.முன்னதாக விவசாயிகள் ஜீவக்குமார் தலைமையில் செல்லப்பன்பேட்டை கிராம விவசாயிகளுக்கு, காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

The post 75 சதவீதத்துக்கு அதிகமாக பயிர் சாகுபடி செய்யாதவர்களுக்கு காப்பீட்டு தொகை, நிவாரணம் வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: