தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில் ஓராண்டில் ரயில்களில் 70 கோடி பேர் பயணம்: முந்தைய ஆண்டை விட 11 சதவீதம் அதிகம்

சேலம்: தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில் இயங்கும் ரயில்களில் கடந்த ஓராண்டில் 70 கோடி பேர் பயணித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய ஆண்டை விட இது 11 சதவீதம் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்கள் உள்ளன. இக்கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்குள்ளும், இங்கிருந்து வட மாநிலங்களுக்கும் பயணிகள் ரயில் போக்குவரத்து மிக அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. 5 ஆயிரத்திற்கும் அதிகமான ரயில்கள் இயக்கப்படும் நிலையில், இந்த ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால், முக்கிய வழித்தடங்களில் மிக அதிகபடியாக சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து இயக்குகிறது. வட மாநிலங்களில் இருந்து வந்து, தமிழ்நாடு, கேரளாவில் வேலை பார்க்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் செல்வதற்காக முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில்களையும் இயக்குகின்றனர். இந்தவகையில் கடந்த நிதியாண்டில் (2023-24) தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில் இயங்கும் ரயில்களில் 70.08 கோடி பேர் பயணித்துள்ளனர்.

இது அதற்கு முந்தைய நிதியாண்டில் பயணித்தவர்களை விட 11 சதவீதம் அதிகமாகும். இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி மற்றும் மூன்றடுக்கு ஏசி, இரண்டடுக்கு ஏசி பெட்டிகளின் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சி, மதுரை வழியாக நெல்லை, நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் எப்போதும் நிரம்பிச் செல்கிறது. அவ்வழித்தடத்தில் இயங்கும் ரயில்களில் காலி இருக்கை என்பதே இல்லாத நிலை நீடிக்கிறது. அதேபோல், சென்னையில் இருந்து சேலம், கோவை வழியே கேரள மாநிலம் எர்ணாகுளம், திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகளவு இருக்கிறது. இம்மார்க்கத்திலும் அதிகளவு பயணிகள் பயணிக்கின்றனர். மேலும், சென்னை, கோவை மற்றும் கேரளாவின் முக்கிய ஊர்களான திருவனந்தபுரம், எர்ணாகுளத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களும் ஆண்டு முழுவதும் நிரம்பி வழிகிறது. இந்த ரயில்களில் சுற்றுலா பயணிகளும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் அதிகளவு செல்கின்றனர். தமிழ்நாடு, கேரளாவில் இருந்து ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார், உ.பி., மகாராஷ்டிரா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் எப்போதும் நிரம்பிச் செல்வதால், அம்மாநிலங்களுக்கு ஆண்டு முழுவதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வகையில் கடந்த நிதியாண்டில் மட்டும் தெற்கு ரயில்வேயில் 1,200 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

இது அதற்கு முந்தைய ஆண்டு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களை விட 135 சதவீதம் அதிகமாகும். இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘ரயில் போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதிலும், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மிக அதிகபடியாக வட மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், அனைத்து தரப்பு மக்களும் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இந்தவகையில் கடந்த நிதியாண்டில் 70 கோடி பேர் பயணித்துள்ளனர். இது நடப்பு நிதியாண்டில் (2024-25) இன்னும் அதிகரிக்கும். அதற்கு ஏற்றார்போல், சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறோம். குறிப்பாக பண்டிகை காலங்களில் தேவைப்படும் வழித்தடங்களில் அதிகபடியான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு, மக்கள் சென்று வர வழிவகை செய்யப்படுகிறது. இதன்மூலம் ரயில்வேக்கும் பயணிகள் போக்குவரத்து வருவாய் அதிகளவு கிடைத்து வருகிறது,’’ என்றனர்.

 

The post தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில் ஓராண்டில் ரயில்களில் 70 கோடி பேர் பயணம்: முந்தைய ஆண்டை விட 11 சதவீதம் அதிகம் appeared first on Dinakaran.

Related Stories: