54 சடலங்கள் இதுவரை மீட்பு மணிப்பூர் வன்முறையில் 100 பேர் பலி?: 200க்கும் மேற்பட்டோர் குண்டு காயங்களுடன் சிகிச்சை

இம்பால்: மணிப்பூரில் நடந்த வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மணிப்பூரில் பெரும்பான்மை பிரிவினரான மெய்டீஸ் சமூகத்தினருக்கு பட்டியலின பழங்குடி அந்தஸ்து தர எதிர்ப்பு தெரிவித்து மலை கிராமங்களை சேர்ந்த நாகா, குகி உள்ளிட்ட சமூகத்தினர் பேரணி நடத்தியதில் கடந்த 3ம் தேதி இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 54 ஆக நேற்று அதிகரித்துள்ளது. இதற்கிடையே, வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. 200க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி குண்டுகளுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. 13,000 மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்த சுமார் 10,000 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

* வன்முறை எதிர்காலத்தை பாதிக்கும்

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்த ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘‘மணிப்பூரில் நடந்த வன்முறை மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். வன்முறையால் அதை சிதைக்க அனுமதிக்கக்கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும்’’ என்றார்.

* நீட் தேர்வு ஒத்திவைப்பு

மணிப்பூரில் வன்முறையைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மட்டும் இன்று நடக்க இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தேசிய தேர்வு முகமை நேற்று அறிவிப்பு வெளியிட்டது. புதிய நீட் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 1,100 பேர் அசாமில் தஞ்சம்

மணிப்பூர் ஜிரிபம் மாவட்டம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இருந்து 1,100க்கும் மேற்பட்டோர் அண்டை மாநிலமான அசாமின் காசர் மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

The post 54 சடலங்கள் இதுவரை மீட்பு மணிப்பூர் வன்முறையில் 100 பேர் பலி?: 200க்கும் மேற்பட்டோர் குண்டு காயங்களுடன் சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: