ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் 4-வது முறையாக தீவிரவாதிகள் தாக்குதல் நடந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. தோடா மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2 முறை தாக்குதல் நடைபெற்றுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 5 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ஏற்கனவே ரீசி மற்றும் கத்துவா பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 1 வாரத்தில் 4 முறை தாக்குதல் நடைபெற்றுள்ளதால் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரவாத தாக்குதலை அடுத்து காஷ்மீரில் உள்ள 4 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கத்துவா மாவட்ட எஸ்பி சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி 3-வது முறையாக பதவியேற்ற ஜூன் 9-ம் தேதி ரீசியில் பேருந்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாயினர். தாக்குதலில் ஈடுபட்டதாக கருதப்படும் 4 தீவிரவாதிகளின் வரைபடத்தை பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு போலீஸ் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவித்துள்ளது. தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
The post ஜம்மு-காஷ்மீரில் 4-வது முறையாக தீவிரவாதிகள் தாக்குதல்: பிரதமர் மோடி பதிலளிக்க ராகுல்காந்தி வலியுறுத்தல் appeared first on Dinakaran.