4.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

 

கிருஷ்ணகிரி, ஏப்.26: கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு கடத்திய 4.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்து, பிக்அப் வேன் மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் எஸ்.ஐ.,க்கள் மூர்த்தி, நேரு, கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு கிருஷ்ணகிரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த பிக்கப் வேன் மற்றும் காரை மடக்கி சோதனையிட்டனர். இந்த இரு வாகனங்ளிலும் 50 கிலோ அளவிலான 90 மூட்டைகளில், 4,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அந்த வாகனங்களில் வந்தவர்கள் கிருஷ்ணகிரி, சுண்டேகுப்பம், பில்லனக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகாவில் அதிக விலைக்கு விற்க முயன்றது தெரிந்தது.

இதையடுத்து பிக்கப்வேனை ஓட்டி வந்த பில்லனக்குப்பத்தை சேர்ந்த டிரைவர் அண்ணாதுரை(32), காரில் வந்த கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு விநாயகர் தெருவை சேர்ந்த விக்ரம்குமார்(26), சுண்டேக்குப்பம் ராஜா(49) ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், 4,500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பிக்கப் வேன், கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 4.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: