‘30 மாதம் முதல்வர்’ திட்டம்: தலைவர்கள் ஏற்க மறுப்பு

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் பதவிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் இருவருக்கும் சம தகுதி கொடுக்கும் வகையில் கட்சி மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா முயற்சி மேற்கொண்டு வருகிறார். அவர், தலா 30 மாதம் முதல்வர் பதவியில் இருங்கள் என்று சிவகுமார் மற்றும் சித்தராமையாவுக்கு ஆலோசனை வழங்கினார். ஆனால் இரு தலைவர்களும் அதை ஏற்க மறுத்து விட்டதாக தெரியவருகிறது.

மடாதிபதிகள் லாபி
கர்நாடக மாநிலத்தில் எந்த பிரச்னையிலும் மடாதிபதிகள் பங்களிப்பு இருக்கிறது. மடாதிபதிகள் தங்கள் வகுப்பை சேர்ந்தவர் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்கள். அந்த வகையில் எஸ். எம். கிருஷ்ணாவுக்கு பின் கடந்த 20 ஆண்டுகளாக ஒக்கலிக வகுப்பைச் சேர்ந்த யாரும் முதல்வர் பதவி வகிக்கவில்லை. ஆகவே இம்முறை காங்கிரஸ் கட்சியின் மகத்தான வெற்றிக்கு காரணமாக இருந்த டி. கே. சிவகுமாருக்கு முதல்வர் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஆதிசுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதி நிர்மாலனந்தநாதசுவாமி மற்றும் நோவினகெரே மடத்தின் மடாதிபதி ஆகியோர் மட்டுமில்லாமல் அகில இந்திய ஒக்கலிக சங்கமும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேபோல் காங்கிரஸ் வெற்றிக்கு கடந்த 2013 முதல் 2018 வரை சித்தராமையா முதல்வராக இருந்த போது கொண்டு வந்த அன்னபாக்கியா உள்ளிட்ட முற்போக்கு திட்டங்கள் காரணம் என்று கனக குரு பீடத்தின் மடாதிபதி கூறி இருப்பதுடன் சித்தராமையாவை முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நான்கு துணை முதல்வர்கள்
இதனிடையே மூத்த எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் வகையில் ஒரு முதல்வருடன் நான்கு துணை முதல்வர் பதவி உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் இதில் லிங்காயத்து, பட்டியலினம், இஸ்லாமியர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முன்னுரிமை கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் நம்ப தகுந்த வட்டாரம் மூலம் தெரிய வருகிறது.

The post ‘30 மாதம் முதல்வர்’ திட்டம்: தலைவர்கள் ஏற்க மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: