2 ஏக்கர்… 1200 மரங்கள்… கொய்யாவால் மகிழும் குமரி விவசாயி!

கன்னியாக்குமரி மாவட்டத்தில் தென்னை, ரப்பர் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக நெல், வாழை விவசாயம் அதிகப்படியாக உள்ளது. மரவள்ளிக்கிழங்கு, நறுமண பயிர்கள், காய்கறிகள் சாகுபடி குறைந்த அளவு நடந்து வருகிறது. சில விவசாயிகள் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் பயிரிடப்படும் பயிர்களை பரீட்சார்த்த முறையில் பயிரிட்டு வெற்றியும் கண்டு வருகின்றனர். அந்த வகையில் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள தோட்டங்களிலும், வீட்டைச் சுற்றி காலியாக உள்ள இடங்களிலும் ரம்புட்டான் பழத்தை சாகுபடி செய்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து கொய்யா சாகுபடி செய்யவும் குமரி மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குமரியில் கொய்யா சாகுபடி பெயர் அளவிற்கு மட்டுமே இருக்கிறது. இதனால் குமரி மாவட்டத்திற்கு தேவையான கொய்யாப்பழங்கள் நெல்லை, தூத்துக்குடியில் இருந்து விற்பனைக்கு வருகிறது. அப்படி விற்பனைக்காக வருகிற கொய்யாக்கள் கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனையும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். இதனால் கொய்யாப்பழத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள தேரிவிளையைச் சேர்ந்த நாகராஜன் தனது நிலத்தில் கொய்யாவைப் பயிரிட்டு லாபம் பார்த்து வருகிறார். அதுவும் இயற்கை முறையில் சாகுபடி செய்து அசத்தி வருகிறார். அவரை சந்தித்தபோது கொய்யா சாகுபடி குறித்து பேச ஆரம்பித்தார்.
“நான் பாரம்பரியமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பல வருடங்களாகவே நெல் விவசாயம் செய்து வருகிறேன். திருச்சியை சேர்ந்த சுகந்தகுமார் என்பவர் கன்னியாகுமரி முருகன்குன்றம் அருகே தரிசாக கிடந்த 2 ஏக்கர் நிலத்தை வாங்கினார்.

அந்த நிலத்தை பயனுள்ளதாக மாற்ற முடிவு செய்து, அந்த நிலத்தில் நின்ற முள்மரங்களை வெட்டி அகற்றிவிட்டு, தென்னை சாகுபடி செய்தார். விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரைப் பெற தோட்டத்தில் 2 ஆழ்துளை கிணறுகளை அமைத்தார். பின்னர் அந்த நிலத்ைத என்னிடம் கொடுத்து தென்னையைப் பராமரிக்குமாறு கூறினார். அப்போது அந்த நிலத்தில் தென்னை தவிர தரிசாக கிடந்த இடத்தில் கொய்யா சாகுபடி செய்ய முடிவெடுத்தேன். கடந்த 2 வருடத்திற்கு முன்பு கர்நாடகாவில் இருந்து தைவான் பிங்க், இந்திரா அக்காகிரன் ஆகிய இரண்டு ரக கொய்யாச் செடிகளை வாங்கி வந்து நட்டேன். இப்படித்தான் கொய்யா சாகுபடிக்கான அடித்தளத்தை உருவாக்கினேன்.

தென்னை மரங்கள் போக மீதி இருக்கிற 2 ஏக்கர் நிலத்தில் 1200 கொய்யாச் செடிகளை நட்டிருக்கிறேன். செடிகள் நட்ட சில நாட்களிலேயே காய்கள் காய்க்கத் தொடங்கியது. ஆனால் நான் ஒரு வருடம் வரை செடியில் இருந்து வரும் பூ மற்றும் காய்களை கவாத்து செய்துவிட்டேன். இந்த முறையில் கவாத்து செய்தால்தான் கொய்யா மரத்திற்குத் தேவையான வளர்ச்சி, காய்களை தாங்குகிற சக்தி என அனைத்தும் கிடைக்கும்.

முதல் வருடம் கவாத்து செய்த பிறகு அடுத்த வருடம் பூ பூத்து காய்த்த காய்களை மரங்களிலேயே விட்டுவிட்டேன். தற்போது அவற்றைத்தான் தினமும் அறுவடை செய்து வருகிறேன். ெகாய்யாச் செடிகளுக்கு இயற்கை உரத்தைத்தான் பயன்படுத்தி வருகிறேன். அதுவும் மாட்டுச்சாணம், குப்பை மண் ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறேன். எந்தவிதமான ரசாயன உரத்தையோ அல்லது பூச்சி மருந்துகளையோ பயன்படுத்துவது கிடையாது. பூச்சிகளில் இருந்த செடிகளை காப்பாற்ற இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சில கரைசல்களைக் கொண்டு 10 நாட்களுக்கு ஒருமுறை செடிகளுக்கு தெளித்து வருகிறேன். இதனால் பூச்சி தாக்குதல் இருப்பதில்லை.

இயற்கை முறையில் விளைந்த கொய்யா என்பதால் முதல் வருடமே விளைச்சலும், சுவையும் அதிகமாகவே இருந்தது. கொய்யா சீசன் தொடங்கிய உடனே உள்ளூர் கொய்யா வியாபாரிகள் பலரும் வாங்க வந்தனர். அவர்கள் மற்ற இடங்களில் விளைகிற கொய்யாக்களைப் போலவே நமது நிலத்தில் இருக்கிற கொய்யாக்களையும் நினைத்து கிலோ ரூ.40க்கு தருமாறு கேட்டனர். சுவையும், சத்தும் மிகுந்த கொய்யாவை ரூ.40க்கு ஏன் கொடுக்க வேண்டும் என கேள்வி எழுந்தது. இதனால் நான் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யவேண்டாம் என முடிவெடுத்தேன்.

அறுவடை செய்யப்படும் காய்களை நாமே நேரடியாக விற்பனை செய்தால், வியாபாரிகளுக்கு கிடைக்கக்கூடிய லாபமும் நமக்கு நேரடியாக வந்து சேரும் என்பதை உணர்ந்து, தோட்டத்தின் அருகே உள்ள பள்ளி முன்பு கொய்யாவை விற்பனை செய்யத் தொடங்கினேன். முதலில் குறைந்த அளவே மக்கள் வாங்கிச்சென்றனர். பின்னர் கொய்யாவின் சுவை அதிகமாக இருந்ததால், வாங்கியவர்கள் மீண்டும் வந்து வாங்கத் தொடங்கினர். கொய்யாமரத்தில் இருந்து அதிகளவில் மகசூல் கிடைக்கும் நாட்களில் பள்ளி அருகே மட்டுமல்லாது, அருகில் உள்ள மணக்குடி பகுதியிலும் விற்பனை செய்கிறேன்.

தினமும் எடுத்துச்செல்லும் கொய்யாக்காய்கள் விற்பனை ஆகிவிடுகிறது. மக்கள் மத்தியில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் உற்பத்திப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், தோட்டத்திற்கு நேரடியாகவும் வந்து கொய்யாவைவாங்கிச்செல்கின்றனர். தோட்டத்தில் இருந்து கிடைக்கும் தைவான் பிங்க் கொய்யாக்காய் கிலோ ரூ.100க்கும், இந்திரா அக்காகிரன் ரக கொய்யாக்காய் ரூ.80க்கும் விற்பனை செய்கிறேன். தினமும் அறுவடை செய்வதால் தினமும் விற்பனை நடக்கிறது.

தோட்டத்தில் இரண்டு ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. இதில் ஒரு கிணற்றில் தண்ணீர் அதிகளவில் உள்ளது. தோட்டத்தில் சோலார் பேனல் அமைக்கப்பட்டு ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வாரத்திற்கு இருமுறை கொய்யாசெடிகளுக்கு பாய்ச்சப்படுகிறது. செடிகளுக்கு இடையே வளரும் புற்களை ஆட்களை வைத்து அகற்றுகிறேன்.

ஒரு வருடத்திற்கு உரம், ஆட்களுக்கு வேலை என மொத்தம் ரூ.4 லட்சம் வரை செலவாகிறது. ஆனால் வருமானம் ரூ.6 லட்சம் வரை கிடைக்கும். செலவு போக ரூ.2 லட்சம் லாபமாக கிடைக்கிறது. இந்த வருடம் குமரி மாவட்டத்தில் பருவமழை பெய்யாத காரணத்தால், மகசூல் அதிக அளவு இல்லை. இதனால் அதிக லாபம் கிடைக்கவில்லை. கண்டிப்பாக காலநிலை ஒத்துழைப்பு இருந்தால், எல்லா செலவும் போக கொய்யாக்காய் மூலம் வருடத்திற்கு ரூ.2 லட்சம் வருவாய் கிடைக்கும். இயற்கை உரம் போட்டு உற்பத்தி செய்யப்படும் கொய்யாவை பல ஊர்களில் இருந்து நேரடியாக வாங்கிச்செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது’’
என்கிறார் நாகராஜன்.

தொடர்புக்கு:
நாகராஜன்: 87542 13861

பூச்சிவிரட்டிக் கலவை

கொய்யாச்செடிகளை பூச்சித் தாக்குதலில் இருந்து காப்பாற்ற இயற்கை முறையில் பூச்சி விரட்டியை தயாரித்து பயன்படுத்தி வருகிறார் நாகராஜன். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “பல்லாரிக்கழிவு, வெந்தயம், டீத்தூள் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, கொதித்த தண்ணீரை எடுத்து வைத்துக்கொள்வேன்.

மருந்து தெளிக்கும் 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட கருவியில் 14 லிட்டர் தண்ணீர், 50 மில்லி வேப்ப எண்ணெய், 500 மில்லி கிராம் பல்லாரிக்கழிவு, வெந்தயம், டீத்தூள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கொதிக்க வைத்த நீர் ஆகியவற்றை ஊற்றி தெளிப்பேன். 2 ஏக்கருக்கு 25 கேன்கள் பயன்படுத்தப்படுகிறது. 10 நாட்களுக்கு ஒருமுறை பூச்சி விரட்டி மருந்து தெளித்து வருகிறேன்’’ என்கிறார்.

The post 2 ஏக்கர்… 1200 மரங்கள்… கொய்யாவால் மகிழும் குமரி விவசாயி! appeared first on Dinakaran.

Related Stories: