2291 மாணவர்கள் குலுக்கல் மூலம் தேர்வு

தர்மபுரி, மே 26: தர்மபுரி மாவட்டத்தில் 25 சதவீத ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் சேர 2291 மாணவர்கள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், ஏரியூர், காரிமங்கலம், பாலக்கோடு, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் ஆகிய 10 ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் உள்ள 144 தனியார் பள்ளிகளில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ், 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை, நேற்று முன்தினம் நடந்தது. இதில், குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2291 மாணவ, மாணவிகள், பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தர்மபுரி நகரில் உள்ள முக்கிய தனியார் பள்ளிகளில், ஒரேநாளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை முடிந்தது. பிரபல பள்ளிகளில் சேர்வதற்கு பெற்றோர்களுடையே கடும் போட்டி நிலவியது. அதிகாரிகள் முன்னிலையில், குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கை நடந்தது. சேர்க்கைக்கான இலக்கை அந்தந்த பள்ளிகள் பூர்த்தி செய்து கொண்டன. இதுகுறித்து மெட்ரிக் பள்ளி கல்வி அதிகாரி கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்ட பிரிவின்படி, நடப்பு கல்வி ஆண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில், 25 சதவீத ஒதுக்கீட்டில் தொடக்க நிலை கல்வியில் சேர்க்கை முடிந்துள்ளது. இதில் 2291 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்,’ என்றார்.

The post 2291 மாணவர்கள் குலுக்கல் மூலம் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: