2 ஆண்டில் 142 விவசாயிகளுக்கு ₹3.66 கோடியில் வேளாண் கருவிகள்

தர்மபுரி, மே 26: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டில், 142 விவசாயிகளுக்கு ₹3.66 கோடியில் மானியத்தில் இயந்திரங்கள், கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் பிரதான தொழிலான விவசாய பணிகளுக்கு, போதிய அளவில் ஆட்கள் கிடைப்பதில்லை. இதையடுத்து, வேளாண் இயந்திரங்கள் கொண்டு விவசாய பணிகள் மேற்கொள்ள, வேளாண்மை பொறியியல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் டிராக்டர், பவர் டிரில்லர், உழவு கருவிகள் மற்றும் சொட்டுநீர் பாசன கருவிகள் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்கள் வாங்க, மானியம் உதவி வழங்கப்படுகிறது. சொந்த நிலமுள்ள விவசாயிகள், இ-வாடகை செயலியில் பதிவு செய்து வேளாண்மை பொறியியல் துறையின் வேளாண் இயந்திரங்களை பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது.

நிலமேம்பாடு, உழவு, விதை விதைத்தல், களையெடுத்தல், அறுவடை, பண்ணைக் கழிவு மேலாண்மை முதலான பணிகளை மேற்கொள்ள, மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள், அருகிலுள்ள வேளாண்மை பொறியியல் துறையின் அலுவலகத்தை அணுகி, உரிய விண்ணப்பத்தை பெற்று, அதனை பூர்த்தி செய்து நிலத்தின் சிட்டா, புல வரைபடம், சிறு, குறு விவசாயிகளின் சான்றிதழ்கள், இ-வாடகை செயலியில் பதிவு செய்த விவரம், ஆதார் அட்டையின் நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்க நகல், ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் சாந்தி கூறியதாவது:குறித்த காலத்தில் வேளாண் பணிகளை செய்யவும், பல்வேறு நவீன வேளாண்மை கருவிகளின் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும், வேளாண்மை பொறியியல் துறையின் முலம் பல்வேறு வேளாண் இயந்திரங்களும், கருவிகளும் தேவைப்படும் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கு இ-வாடகை, ஆன்லைன் செயலியின் முலம் பதிவு செய்யும் போதே, இயந்திர மயமாக்கல் கூடுதல் மானியம் பெற இ-வாடகையில் மானியம் தேவை என பதிவு செய்து அதற்கான ஆவணங்களை பதிய வேண்டும். வேளாண் இயந்திர மயமாக்குதல் உப இயக்கம் திட்டத்தின் கீழ், 96 விவசாயிகளுக்கு ₹1.77 கோடி மானியத்தில் டிராக்டர், பவர் டில்லர், ரோட்டாவேட்டர் போன்ற இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைத்தல் திட்டத்தின் கீழ், 13 விவசாய குழுக்களுக்கு ₹1.04 கோடி மானியத்தில் இயந்திரங்கள் வாடகை மையம் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட் அமைத்தல் திட்டத்தில் 28 விவசாயிகளுக்கு ₹60 லட்சம் மானியத்தில் 28 பம்புசெட்டுகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. மதிப்பு கூட்டும் வேளாண் இயந்திரங்கள் மையங்கள் ₹25 லட்சம் மானியத்தில் 5 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டில் 142 விவசாயிகளுக்கு, ₹3.66 கோடியில் மானியத்தில் இயந்திரங்கள், கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு கலெக்டர் கூறினார்.

The post 2 ஆண்டில் 142 விவசாயிகளுக்கு ₹3.66 கோடியில் வேளாண் கருவிகள் appeared first on Dinakaran.

Related Stories: