கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் உள்ள சேகண்யம் ஊராட்சியில் இருவேறு காவல் நிலைய எல்லையில் அமைந்திருக்கும் திருக்கோயில்களில் 11 கோபுர கலசங்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சேகண்யம் ஊராட்சியில் கங்கானிமேடு கிராமத்தில் கங்கையம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 4 கோபுர கலசங்கள் இருந்தது. இந்நிலையில், சாமி கும்பிட சென்ற ஊர் மக்கள் நேற்று பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதில் மர்ம நபர்கள் 4 கோபுர கலசங்களையும் திருடி சென்றுள்ளனர்.
மேலும், அதே பகுதியில் அமைந்துள்ள கங்காதீஷ்வரன் கோயிலில் உள்ள ஒரு கோபுர கலசத்தையும், அதைத்தொடர்ந்து கங்காதீஸ்வரன் கோயிலில் அருகாம்பையில் அமைந்துள்ள செல்லியம்மன் கோயிலில் உள்ள கோபுர கலசத்தையும் திருட வந்த மர்ம நபர்கள் முயற்சி தோல்வி அடைந்ததால் கோபுர கலசத்தை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இதேபோல், கவரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐயர் கண்டிகை பகுதியில் அமைந்துள்ள அவிநாசி அப்பர் சிவன் கோயிலில் உள்ள 7 கலசங்கள் திருடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post 2 கோயில்களில் 11 கோபுர கலசங்கள் திருட்டு; மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.