தமிழக அளவில் 3வதாக கேங்மேன் தேர்வில் தர்மபுரி பெண் தேர்வு

கிருஷ்ணகிரி, டிச.5:  கிருஷ்ணகிரியில் நடந்த மின்வாரிய கேங்மேன் தேர்வில், தர்மபுரியை சேர்ந்த பெண் தமிழக அளவில் மூன்றாவதாக தேர்வு செய்யப்பட்டார்.தமிழக மின்வாரியத்தில் 44 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. தற்போது, தமிழகம் முழுவதும் 5000 கேங்மேன் பணிக்கான ஆட்கள் தேர்வு, கடந்த 25ம் தேதி முதல் நடந்து வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், கேங்மேன் பணிக்கான ஆட்கள் தேர்வுக்கு 3221 பேர் ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர். நாளொன்றுக்கு 202 பேர் வீதம் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 3 கட்டமாக உடற்தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. முதல் தேர்வில்,  40 அடி உயர மின்கம்பத்தில் இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு ஏறி கம்பத்தின் முக்கால் பகுதியில் நிற்பதற்காக குச்சியை குறுக்காக கட்ட வேண்டும். பின்னர் அதன்மீது நின்று கிராக் ஆரம் பொருத்த வேண்டும். பின்னர் அங்கிருந்து கீழிறங்க வேண்டும். இவை அனைத்தும் 8 நிமிடத்தில் முடித்தால், முதல் தேர்வில் வெற்றி பெறுவார். இரண்டாவதாக, 2 நிமிடத்தில் மின்கம்பத்தில் கிரீப்பர் செட் மாற்ற வேண்டும். மூன்றாவதாக 32 கிலோ எடை கொண்ட கிராம் ஆரம் இரும்பைத் தூக்கிக் கொண்டு, 1 நிமிடத்தில் 100 மீட்டர் ஓடவேண்டும். இவையனைத்திலும் தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு தேர்ச்சி சான்று வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சாக்கன் கூறியதாவது: கேங்மேன் பணிக்கான ஆட்கள் தேர்வில், நேற்று வரை 1325 பேர் பங்கேற்றனர். இதில், 315 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த உடற்தகுதித் தேர்வில் 61 பெண்கள் பங்கேற்றனர். முதல் முறையாக, தர்மபுரி மாவட்டம் இண்டூரைச் சேர்ந்த ஜோதி(28) என்ற பெண் நேற்று தேர்வானார். இவர் சேலம், கோபிசெட்டிப்பாளையத்திற்கு அடுத்து, தமிழகத்தில் மூன்றாவது பெண்ணாக கேங்மேன் பணிக்கு கிருஷ்ணகிரியில் தேர்வாகி உள்ளார். கம்பத்தில் ஏறி கிராக் ஆரம் பொருத்த 8 நிமிடத்தில், இவர் 7.38 நிமிடத்தில் பொருத்தினார். 2 நிமிடத்தில் மாற்ற வேண்டிய கிரீப்பர் செட்டை, 1.59 நிமிடத்திலும், வி கிராம் ஆரத்தைத் தூக்கிக் கொண்டு 1 நிமிடத்தில் 100 மீட்டர் ஓட வேண்டிய தூரத்தை, 59:22 செகண்டில் ஓடி முடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து ஜோதி கூறுகையில், ‘நான் இண்டூரில் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்று வருகிறேன். தற்போது கேங்மேன் பணிக்காக விண்ணப்பித்திருந்தேன். இதற்காக கடந்த 10 நாட்களாக மின்கம்பம் ஏற பயிற்சி பெற்று வந்தேன். இன்று (நேற்று) கிருஷ்ணகிரியில் நடந்த உடற்தகுதித் தேர்வில் 3 பிரிவிலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். என் கணவர் கயிறு திரிக்கும் கூலி வேலை செய்து வருகிறார். எனக்கு கேங்மேன் பணி கிடைத்தால், சிறப்பாக பணியாற்றி என் குழந்தைகளை நன்றாக படிக்க வைப்பேன்,’ என்றார்.

Related Stories: