நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு சீமை கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

வேப்பனஹள்ளி, நவ.5: வேப்பனஹள்ளி மற்றும் ஊத்தங்கரை பகுதியில் நீர்நிலைகளில் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக பருவ மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த நீர் நிலைகள், குட்டைகள், ஏரி மற்றும் குளங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் பல்வேறு அணைகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது அனைத்து நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், தென்பெண்ணையாறு மற்றும் வட்டராறு, வேப்பனஹள்ளி, ஊத்தங்கரை உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் கரையோரம் மற்றும் ஆற்று பகுதிகளில் பெய்த மழையால் சீமை கருவேல மரங்கள் அதிகம் படர்ந்து காணப்படுகிறது. பொதுவாக இம்மரங்கள் நீர்நிலைகளை வறண்டு போக செய்யக்கூடிய மரங்கள் ஆகும். எனவே, நீராதாரத்தை கருத்தில் கொண்டு அதிகளவில் படர்ந்து காணப்படும் சீமை கருவேல மரங்களை அகற்ற வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்தால் வரும் நாட்களில் நீராதாரம் காக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். எனவே, விவசாய பணிகள் செம்மையாக நடக்க சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: