திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராக பெருமாள் கோயில் குளத்திற்கு தண்ணீர் கொண்டுவரும் பாதையை மாற்றி அமைக்கக்கோரி, நகராட்சி ஆணையரிடம் வியாபாரிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் தி.ராசகுமார் கொடுத்துள்ள மனுவின் விவரம்:
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் குளத்திற்கு, பட்டறைபெரும்புதூர் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் இருந்து பைப்லைன் மூலம் தண்ணீரை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென ராட்சத பைப்புகளும் ஆங்காங்கே கொண்டுவந்து இறக்கிவைக்கப்பட்டு உள்ளது. தற்போது, திருவள்ளூர் பஜார் வழியாக குழாய் பதிக்கும் பணி செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே, அடிக்கடி சாலை மீது சாலை போட்டதால் பஜார் வீதி மேடாகவும், கடைகள் பள்ளத்திலும் உள்ளது. இந்நிலையில் அவ்வழியாக பைப்லைன் புதைத்தால் மக்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். பட்டறைபெரும்புதூரில் இருந்து டோல்கேட், சி.வி.நாயுடு சாலை வழியாக குளத்துக்கு பைப்லைன் அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல வழி இருக்கிறது.