25ம் தேதி முதல் ஸ்டிரைக் டாக்டர்கள் கோரிக்கைகளை முதல்வர் பரிசீலிக்க வேண்டும்

கிருஷ்ணகிரி,அக்.17:  தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தின் போது அவசர அறுவை சிகிச்சை, சிறப்பு  காய்ச்சல் வார்டுகளில் மட்டுமே டாக்டர்கள் பணியாற்றுவார்கள் என மாநில ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி  அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று அனைத்து அரசு டாக்டர்கள்  சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்  தயாரிப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர்  லட்சுமிநரசிம்மன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், டாக்டர்கள்  ராமநாதன், சதீஸ், கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாநில  ஒருங்கிணைப்பாளர் பேசியது: பட்ட  மேற்படிப்பில், அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பணியிடங்களை மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கைக்கு  அல்லாமல் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கொண்டு நிர்ணயிக்க வேண்டும் என்பது  உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி, வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இதனை  தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவில், 6 வாரத்திற்குள் தீர்வு  காண்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலர் ஆகியோர் எழுத்துபூர்வமான  அறிக்கையால் போராட்டம் திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில், போராட்டத்திற்கு அரசு தீர்வு காணாத நிலையில், வரும் 25ம்  தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் நடத்த முடிவு  செய்யப்பட்டுள்ளது. வேலை நிறுத்த போராட்டத்தின் போது அவசர அறுவை சிகிச்சை,  காய்ச்சல் சிறப்பு வார்டுகளில் மட்டும் டாக்டர்கள் பணிபுரிவார்கள். தமிழக  முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் எங்களது கோரிக்கைகளுக்கு முடிவு  எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில், மாநில உறுப்பினர் டாக்டர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.

Related Stories: