அன்னசாகரத்தில் மஞ்சள் விளைச்சல் அமோகம்

தர்மபுரி, அக்.16: தர்மபுரி அருகே அன்னசாகரத்தில் மஞ்சள் விளைச்சல் அமோகமாக உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள் ஆகிய பயிர்களே முக்கிய விவசாய பயிராக பயிரிடப்படுகிறது. நெல் 1400 ஹெக்டேர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 35,400 எக்டேர் பயறு வகைகள் 17,400 ஹெக்டேர், பருத்தி 8,300 ஹெக்டேர், கரும்பு 2,841 ஹெக்டேர், எண்ணெய் வித்துக்கள் 5,148 ஹெக்டேரிலும், மஞ்சள் 5 ஆயிரம் ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்படுகிறது.  

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர்ந்து பருவமழை போதிய அளவு பெய்யாமல் இருந்து வந்தது. நடப்பாண்டில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தாலுகாக்களில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகளவில் பெய்துள்ளது. இதையடுத்து அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி அருகே அன்னசாகரம், மொரப்பூர் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். இதனால் மஞ்சள் பயிர் செழித்து  வளர்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழையும் வரும் 17ம் தேதி தொடங்க உள்ள நிலையில், போதிய மழை பெய்தால் நடப்பாண்டில் மஞ்சள் அதிகபட்ச சாகுபடியை எட்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: